ஆச்சரியம், எளிமையை வெளிப்படுத்தும் படைப்புக்களை உருவாக்குங்கள்.
மெரினா ராஜ்- வத்திக்கான்.
உலகளாவிய மொழியாம் இசை, மனிதநேயம் மற்றும் கல்வியைக் கற்பித்து மனிதமயமாக்கலை அதிகரித்து வருகின்றது எனவும், ஆச்சரியம் மற்றும் எளிமையோடு திகழும் இயேசுவின் குடில் போல உங்கள் படைப்புக்களையும் ஆச்சரியம் எளிமை கொண்டதாக உருவாக்குங்கள் எனவும், கிறிஸ்துபிறப்பு விழா போட்டியில் பங்கேற்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 14 இவ்வெள்ளி வத்திக்கானின் கொன்சிஸ்தொரோ அறையில் கிறிஸ்துமஸ் காண்டெஸ்ட் என்னும் கிறிஸ்துபிறப்பு விழா போட்டிகளில் பங்கேற்பவர்களை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, பெரிய நட்சத்திர கலைஞர்களின் சாயலாக இல்லாமல் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மனித உருவில் குழந்தையாக, கன்னியிடம் இறைவன் பிறந்தது ஆச்சரியம் என்றும் விலங்குகளுக்கான தீவனத்தொட்டியை தனது தொட்டிலாக கொண்டது எளிமை என்றும், இத்தகைய ஆச்சரியம், மற்றும் எளிமை வழியாக அமைதியை இயேசுவின் பிறப்பு கொண்டுவந்தது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
இதயத்தைத் தொடுகின்ற, தொடர்பினை ஏற்படுத்துகின்ற, ஆச்சரியம் மற்றும் எளிமை கொண்ட பாடல்கள், இவ்வுலகில் அமைதிக்கான உங்கள் பங்களிப்பிற்குக் காரணமாக அமையும் என்றும், இவ்வமைதியே இயேசு பிறப்பு வழியாக இறைவன் இவ்வுலகிற்கு கொடுக்க விரும்பிய மிகப்பெரிய பரிசு என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
கல்வி, படைப்பாற்றல், மற்றும் இளையோர் குரலுக்கு செவிமடுப்பதன் வழியாக, இருளான உலகிற்கு ஒளி தர முடியும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா போட்டிகள் இளையோர்க்கான இரு அமைப்புகளால் வழிநடத்தப்படுகின்றன.
எல்லாரிடத்திலும், குறிப்பாக இளையோரிடத்தில் உள்ள படைப்பாற்றலை வெளிக்கொணர வேண்டுமென்னும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் போட்டிகள், உரை, இசை, பகுப்பாய்வு என்னும் மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன.
கல்வியின் வழியாக உலகத்தை மிகச் சிறந்த இடமாக மாற்ற விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, இளையோரின் குரலுக்கு செவிமடுக்க இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்