இயேசுவே, புனித பிரான்சிசின் தனித்துவமான புனிதத்துவத்திற்கு ஊற்று
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கிறிஸ்துவுக்கும், அவரது இறையாட்சிப் பணிக்கும் பிரமாணிக்கத்தோடு வாழுமாறு, அசிசி நகர் புனித பிரான்சிஸ், இந்த நம் காலத்திலும் திருஅவையை வலியுறுத்தி வருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 31, இத்திங்களன்று கூறியுள்ளார்.
அசிசி நகர் புனித பிரான்சிஸ் இறைபதம் சேர்ந்ததன் 800வது ஆண்டு நிறைவுக்கு மூன்றாண்டு தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ள, திருஅவை ஒருங்கிணைப்பு அமைப்பின் 300 உறுப்பினர்களை இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவே, புனித பிரான்சிசின் தனித்துவமான புனிதத்துவத்திற்கு ஊற்றாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
கிறிஸ்துவைப் பின்பற்றுதல், ஏழைகள்மீது அன்பு
தான் திருஅவையின் தலைமைப் பணிக்கு, பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவுசெய்ததற்குரிய காரணத்தை முதலில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவுசெய்தபோது, அப்புனிதர், மிகவும் புகழ்பெற்ற, அதேநேரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் என்பதையும், அதேநேரம், அப்புனிதர், அமைதியின், ஏழ்மையின், மற்றும், படைப்பை அன்புகூர்ந்து அதைக் கொண்டாடிய மனிதர் என்பதையும் அறிந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
அப்புனிதருக்கு இவையனைத்திற்கும் ஊற்றாக அமைந்திருந்தது இயேசு கிறிஸ்து மீது அவர் கொண்டிருந்த அன்பே என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
ஏழையாகப் பிறந்த கிறிஸ்து மற்றும், ஏழைகள் மீது அன்பு, இவையிரண்டையும் பிரிக்கமுடியாதபடி அப்புனிதர் வாழ்ந்தார் என்றும், சிறப்பிக்கப்படவிருக்கும் பிரான்சிஸ்கன் 8வது நூற்றாண்டு நிகழ்வுகள் (2023-2026), வெறும் சடங்குமுறைகளோடு நின்றுவிடாமல், கிறிஸ்துவைப் பின்பற்றுதல் மற்றும், ஏழைகள்மீது அன்பு ஆகியவற்றோடு இணைந்துவரவேண்டும், இவை திருஅவையின் முகத்தைப் புதுப்பிப்பதற்கு பயனுள்ள கொடைகளாகும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
பிரான்சிஸ்கன் 8வது நூற்றாண்டு நிகழ்வுகள்
2023ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை படிப்படியாக நடைபெறும் பிரான்சிஸ்கன் 8வது நூற்றாண்டு நிகழ்வுகள், முதலில் 1223ஆம் ஆண்டில் அசிசி நகர் புனித பிரான்சிஸ், இத்தாலியின் Greccioவில் உயிருள்ள குடிலை உருவாக்கியது, மற்றும், பிரான்சிஸ்கன் சபைக்கு கொள்கைகளை வகுத்து கொடுத்ததில் தொடங்குகிறது என்றும், இது, இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்ததில் கடவுளின் வழியை கண்டுணர, நமக்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
அடுத்து 1224ஆம் ஆண்டில் Vernaவில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெற்ற ஐந்து காய வரம், தாந்தே கூறுவதுபோல் "இறுதி முத்திரையை" குறிக்கின்றது என்றும், அவ்வரம், அப்புனிதரை, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவோடு ஒன்றிக்கச் செய்தது என்றும், வேதனையாலும் துன்பத்தாலும் குறிக்கப்பட்ட மனித வரலாற்றுக்குள் நுழைவதற்கு அது திறனை அளித்தது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இறுதியாக, 1226ஆம் ஆண்டில், Porziuncolaவில் புனித பிரான்சிஸ் இறைபதம் அடைந்தது, கிறிஸ்தவத்தின் இன்றியமையாத கூறாகிய நிலைவாழ்வு மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, எட்டு நூற்றாண்டுகள் கடந்தும், புனித பிரான்சிஸ் ஒரு மறைபொருளாகவே இருக்கிறார் என்றும், இவ்வுலகம் முழுவதும் இப்புனிதர் பின்னால் வருவதற்கும், அவரைப் பார்ப்பதற்கும், அவர் கூறுவதைக் கேட்டுப் பணிந்து நடக்கவும் காரணம் என்ன என்று அருள்சகோதரர் Masseoவின் கேள்வி இன்றும் மாறாமல் இருக்கிறது என்றும் எடுத்தியம்பியுள்ளார்.
செவிமடுத்தல், நடத்தல், நற்செய்தி அறிவித்தல்
நற்செய்தியின் வாழ்வை வாழ்ந்த புனித பிரான்சிசின் பள்ளியில், அதாவது, சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் வாழ்வோர் மத்தியில் சென்று, அவர்கள் பேசுவதற்குச் செவிமடுத்தல், அவர்களோடு நடத்தல் அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தல் ஆகியவற்றை ஆற்றும்போது இக்கேள்விக்குரிய பதிலைக் காண முடியும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
முதலில் செவிமடுத்தல் பற்றி விளக்கிய திருத்தந்தை, "பிரான்சிஸ், சென்று, எனது வீட்டை பழுதுபார்" என திருச்சிலுவையிலிருந்து அவர் கேட்ட இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, வீடு என்பதை திருஅவை என உணர்ந்து, அது கிறிஸ்துவின் முகத்தைப் பிரதிபலிக்கவேண்டுமென்று அதிகமதிகமாக அவர் பணியாற்றினார் என்று திருத்தந்தை கூறினார்.
அடுத்து. நடத்தல் பற்றிக் கூறிய திருத்தந்தை, அப்புனிதர் ஒரே இடத்தில் இருக்கவில்லை, இத்தாலியில் நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தார், இதுவே கிறிஸ்தவ சமுதாயத்தின் வாழ்வுமுறையாக இருக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நீதி மற்றும், நம்பிக்கை தேவைப்படும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளுக்குச் சென்று நற்செய்திப் பணியாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.
நீண்டகாலமாகக் காத்திருந்த, இந்த ஆன்மிக மற்றும், கலாச்சாரப் பயணம், 2025ஆம் யூபிலி ஆண்டோடு சேர்ந்துவருகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூற்றாண்டு நிகழ்வுகளுக்குத் தன் வாழ்த்தையும் ஆசிரையும் அளித்துள்ளார்.
இந்த 800ஆம் ஆண்டு நிகழ்வுகள், 2026ஆம் ஆண்டில் நிறைவடையும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்