இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறையில் இறந்தோருக்குச் செபம்.
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும், காயமுற்றோருக்கு, தன் செபங்களையும், அவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், இஞ்ஞாயிறன்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 02, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, மூவேளை செப உரையாற்றியபின்னர், அக்டோபர் 01, இச்சனிக்கிழமை இரவில் இந்தோனேசியாவின் கஞ்சுருஹான் (Kanjuruhan) கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளது மற்றும், காயமடைந்துள்ளது குறித்த கவலையைத் தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில், உள்ளூர் கால்பந்து அணிகளான அரேமா எஃப்சி (Arema FC), பெர்செபயா சுரபயா (Persebaya Surabaya) ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடியதைத் தொடர்ந்து பதட்டநிலை ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர், மற்றும், கண்ணீர்ப் புகைகளை வீசினர். இதற்குத் தப்பித்து நாலாபுறமும் இரசிகர்கள் சிதறி ஓடியதில் 174 பேர் உயிரிழந்தனர், மற்றும், 180 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில், ஏறத்தாழ 38,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், அதைவிட அதிகமாக 42,000 பேர் அங்கு கூடியிருந்தனர் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது காவல்துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று, பன்னாட்டு கால்பந்து அமைப்பான FIBA கூறியுள்ளது.
புனித பேதுரு ஒலி-ஒளி காட்சி
அக்டோபர் 02 இஞ்ஞாயிறு முதல், 16ம் தேதி வரை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இத்தாலி நேரம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை திரையிடப்படும், திருத்தூதுர் புனித பேதுருவின் வாழ்வு குறித்த ஒலி-ஒளிக் காட்சி குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்