விருப்பம், நம் இலக்கைத் தெளிந்துதேர்வுசெய்யும் திசைமானி
மேரி தெரேசா: வத்திக்கான்
அக்டோபர் 12, இப்புதன் இத்தாலி நேரம் காலை ஒன்பது மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் பற்றிய ஐந்தாவது பொது மறைக்கல்வியுரையை வழங்கினார். அந்நிகழ்வில் பங்குகொள்வதற்காக இப்புதன் காலை ஆறு மணிக்கெல்லாம், புதுமணத் தம்பதியர், பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான பல்வேறு நாடுகளின் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் வளாகத்தைச் சுற்றிலும் காத்திருந்தனர். அவர்கள் காலை எட்டு மணிக்கெல்லாம் வளாகத்திற்குள் செல்லவும் தொடங்கினர். யோவான் நற்செய்தி, இயல் 5ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, உடல் நலமற்றவர் நலமடைதல் என்பது குறித்த பகுதி முதலில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.
எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்... முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (யோவா.5:2,5-9)
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். ஆன்மிகத் தெளிந்துதேர்தல் பற்றிய நம் மறைக்கல்வியில், இறைவேண்டல், தன்னையே அறிதல் ஆகிய இரு கூறுகளின் முக்கியத்துவம் பற்றிச் சிந்தித்துள்ளோம். அதைத் தொடர்ந்து இன்று, தெளிந்துதேர்தலுக்கு இன்றியமையாத மூன்றாவது கூறான “விருப்பம்” குறித்துச் சிந்திப்போம். உண்மையில், தெளிந்துதேர்தல் என்பது, ஒருவிதமான தேடலாகும். தேடுதல் என்பது, நம்மிடம் குறைபடும் எதையோ அறிந்துகொள்ள முனைவதிலிருந்து பிறப்பதாகும். விருப்பம் என்பது, முழு நிறைவை ஒருபோதும் கண்டுகொள்ளாத நிறைவுக்காக ஏங்குவது என்று ஆன்மிகப் போதகர்கள் கூறுகின்றனர். இது, கடவுளின் இருத்தல் நம்மில் இருக்கின்றது என்பதன் அடையாளமாகும். விருப்பம் என்பது, மகிழ்வுக்காகவும், மனித இதயத்தில் இருக்கின்ற நிறைவுக்காகவும் உள்ளூர ஏங்குவதாகும். நம் ஆன்மிக மரபில், விருப்பம் என்பது, நம் வாழ்வின் இறுதி இலக்கிற்கு வழிகாட்டும் ஒருவித திசைமானியாக, நம் ஆன்மா கடவுளுக்காகவும், அவர் மட்டுமே அளிக்கவல்ல அமைதிக்காகவும் ஏங்குவதன் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஆண்டவரைத் தேடுவது, மற்றும், அவரது வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும்போது, துன்பங்களுக்கு மத்தியில் நாம் உறுதியுடன் இருக்கவும், தியாகங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும், அனைத்துக் காரியங்களையும் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப வாழ முனையவும் சக்தியைக் கண்டுகொள்கிறோம். இயேசு, தம்மிடம் ஒரு புதுமையைத் தேடும் மக்களிடம், “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” (எ.கா.மாற்.10:51) என்றே பல நேரங்களில் கேட்டுள்ளார். இறைவேண்டலில் ஆண்டவரோடு நாம் நடத்தும் உரையாடல், நமது உள்ளார்ந்த விருப்பங்களைத் தெளிவாக எடுத்துரைக்கவும், நம் வாழ்வில், அருள் மற்றும், குணப்படுத்தலின் புதுமைகளை நிகழ்த்த அவரை அனுமதிக்கவும் உதவுகிறது. தமது விண்ணக வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக ஆக்கவும், நிலைவாழ்வின் மகிழ்வையும், நிறைவையும் அவரில் நாம் கண்டுகொள்ளவும் வேண்டுமென்று இயேசு விரும்புகிறார்.
விருப்பம், ஆன்மிக தெளிந்துதேர்தலுக்கு இன்றியமையாத மூன்றாவது முக்கிய கூறு என எடுத்துரைத்து, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அக்டோபர் 11, இச்செவ்வாயன்று திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களின் திருநாளைச் சிறப்பித்தோம். ஆன்மாக்களின் மீட்புக்காகவும், உலகின் அமைதிக்காகவும் மிகுந்த அக்கறையோடு பணியாற்றிய அத்திருத்தந்தை, போர்களினால் துன்புறுவோருக்காகவும், உலகில் அமைதி நிலவவும் இறைவனிடம் பரிந்துபேசுமாறு அவரிடம் வேண்டுவோம் என்றுரைத்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்