தேடுதல்

மறைக்கல்வியுரை: செபம், தன்னறிவு, சுதந்திரத்தில் வளர உதவுகின்றன

நம் வாழ்வில் எவற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறோம், மற்றும், வாழ்வுக்கு உண்மையிலேயே தேவை என்ன என்பதைக் கண்டுணரும்வண்ணம், தன்னையே அறிந்துகொள்ள, பொறுமையோடு தெளிந்துதேர்வு செய்வோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்டோபர் 05, இப்புதன், உலக ஆசிரியர்கள் நாள். அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து, மகத்தான சேவையாற்றும் நம் ஆசிரியப் பெருமக்களுக்கு நம் நல்வாழ்த்தையும், நன்றியையும் தெரிவிப்போம். அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாத இப்புதன் காலையில், நாளின் முதல் நிகழ்வாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கிலுள்ள அறை ஒன்றில், மெத்தடிஸ்ட்-கத்தோலிக்க பன்னாட்டுக் குழுவின் 17 பேரைச் சந்தித்து உரையாடினார். அதற்குப்பின்பு, காலை ஒன்பது மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தெளிந்துதேர்தல் பற்றிய பொது மறைக்கல்வியுரைப் பகுதியில், தன்னையே அறிதல் குறித்து எடுத்துரைத்தார். சீராக் ஞானம் நூலிலிருந்து ஒரு பகுதி முதலில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.

ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். (சீராக் 17: 1.6-7)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். கடந்த வார நம் மறைக்கல்வியுரையில், தெளிந்துதேர்தலுக்கு, இறைவேண்டல் இன்றியமையாத கூறாக,  அதற்கு கடவுளிடம் நெருக்கம், மற்றும், அவரில் நம்பிக்கை அவசியம் என்பது குறித்து சிந்தித்தோம். நல்லதொரு தெளிந்துதேர்தலுக்கு அதை ஏறக்குறைய முழுமைபெறச் செய்வதாக இருக்கின்ற தன்னையே அறிதலும் தேவைப்படுகின்றது என்பது பற்றி இன்று எடுத்துரைக்க விரும்புகிறேன். அது, உண்மையிலேயே நினைவு, கூர்மதி, விருப்பம், பாசம் ஆகிய மனிதத் திறமைகளை உள்ளடக்கியுள்ளது. நம்மையே நாம் போதுமான அளவு அறியாததால்தான் தெளிந்துதேர்தலை எவ்வாறு செய்வது என்பதை பலநேரங்களில் அறியாதிருக்கிறோம். அதனால் நமது உண்மையான தேவை என்ன என்பதையும் தெரியாதிருக்கிறோம். நம்மையே நாம் அறிவது எளிதானதல்ல. அதற்கு, நம் இதயத்தின் உள்ளாழத்தில் நுழையவேண்டும். இதற்கு நேர்மையும் பொறுமையும் தேவைப்படுகின்றன. தன்னையே அறிதல் என்பது, தன்னிலே கடவுள் வழங்கும் அருளின் கனியாகும். அவ்வருள், நம் பொய்த்தோற்றங்களைக் கைவிடவும், உண்மையிலேயே நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், உண்மையான மகிழ்வைத் தருகின்ற காரியங்களை ஏற்றுக்கொள்ளவும் நம்மை இட்டுச்செல்கின்றது. அதன் பயனாக, கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவதில், ஆழ்மனதில் மறைந்துள்ள நம் உண்மையான இயல்புக்கும், நிலையான ஆன்மிக மகிழ்ச்சி, மற்றும், நிறைவுக்கு நம்மை இட்டுச்செல்கின்ற பாதைகளுக்கும் வாயிலைத் திறக்கும் “கடவுச்சொற்களை” கற்றுக்கொள்கிறோம். செபச்சூழலில் கிடைக்கின்ற இத்தகைய உள்தூண்டுதல், நமக்குள்ளே நாம் செல்வதற்கும், உண்மையான தெளிந்துதேர்தலுக்கும் பெரும் உதவியாக இருக்கின்றது. இதுவே இரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் ஆன்ம பரிசோதனை செய்யும் பாரம்பரியப் பழக்கவழக்கமாகும். தினசரி இறைவேண்டல் மற்றும், தன்னையே அறிவதன் வழியாக, நமது வாழ்வில் ஆண்டவரின் திட்டத்தைத் தெளிந்துதேர்வு செய்ய அதிகமதிகமாய் தயாராக இருப்போம். நம் இறைத்தந்தையின் அன்புப் பிள்ளைகளாக, நம் மாண்பு மற்றும், சுதந்திரத்தை மேலும் அதிகமாக உணர்ந்து போற்றுவோம்.

புதன் மறைக்கல்வியுரை 051022
புதன் மறைக்கல்வியுரை 051022

இவ்வாறு தெளிந்துதேர்தலுக்கு தன்னறிவு முக்கியம் என்பதை எடுத்துரைத்து,  இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அக்டோபர் 05, இப்புதனன்று திருவழிபாட்டில் புனித Faustina Kowalskaவை நினைவுகூர்ந்தோம், இப்புனிதை வழியாக, கடவுள் தம் இரக்கத்தில் மீட்பைத் தேடும் வழிகளை உலகிற்குக் காட்டியுள்ளார், இந்நாளில் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை சிறப்பாக நினைத்துப் பார்ப்போம், இதயங்களை மாற்றவல்ல கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அமைதியின் அரசியாம் அன்னை மரியாவின் பரிந்துரையை அந்நாட்டிற்காக இறைஞ்சுவோம் என திருத்தந்தை கூறினார். இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அக்டோபர் 4, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் இறை அர்ப்பணம், மக்கள் சேவை, படைப்போடு கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை நம் வாழ்வுக்கும் வழிகாட்டியாக அமைப்போம் என்று திருத்தந்தை கூறினார். பின்னர், இளையோர், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர் புதுமணத் தம்பதியர் என அனைவரும், அசிசி நகர் பிரான்சிசின் வாழ்வைப் பின்பற்றுமாறு  திருத்தந்தை கேட்டுக்கொண்டார். பின்னர், உங்கள் எல்லாரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2022, 12:49