தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: வருகிற நவம்பரில் தன் பூர்வீக நகருக்குச் செல்கிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உறவினர் ஒருவரின் 90வது பிறந்த நாளையொட்டி, வருகிற நவம்பர் 19, 20 ஆகிய இரு தேதிகளில், வட இத்தாலியின் ஆஸ்தி நகருக்குச் செல்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உறவினர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாட இவ்வாண்டு நவம்பரில் இத்தாலியின் ஆஸ்தி என்ற நகருக்குச் செல்வார் எனவும், அச்சமயத்தில் அம்மறைமாவட்ட கத்தோலிக்கரைச் சந்தித்து அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவார் எனவும், அக்டோபர் 19, இப்புதனன்று பாப்பிறை இல்ல நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உறவினர் ஒருவரின் 90வது பிறந்த நாளையொட்டி, வருகிற நவம்பர் 19, 20 ஆகிய இரு தேதிகளில், வட இத்தாலியின் Piedmont மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகருக்குச் செல்கிறார்.

நவம்பர் 19, சனிக்கிழமை பிற்பகலில் ஆஸ்தி நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, அந்நகரில் தங்கும் இரு நாள்களில் தன் குடும்ப உறவுகளையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20, ஞாயிறு முற்பகல் 11 மணிக்கு, ஆஸ்தி நகர் பேராலயத்தில் அம்மறைமாவட்ட குழுமத்திற்கு திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று மாலை வத்திக்கானுக்குத் திரும்புவார்.

திருத்தந்தை ஆஸ்தி நகருக்கு வருவதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஆஸ்தி மறைமாவட்ட ஆயர் Marco Prastaro அவர்கள், திருத்தந்தையின் தனிப்பட்ட குடும்ப சந்திப்பை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பூர்வீகம் இத்தாலி

Jorge Mario Bergoglio என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை Mario Josè Bergoglio அவர்கள், இத்தாலியின் ஆஸ்தி மாவட்டத்தின் Portacomaro என்ற ஊரில் பிறந்தவர். இவரது அன்னை Regina Sivori அவர்கள், வட இத்தாலியைப் பூர்வீகமாகக்கொண்ட குடும்பத்தில், புவனோஸ் அய்ரஸ் நகரில் பிறந்தவர். இவர்களின் குடும்பங்கள் 1929ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்குப் புலம்பெயர்ந்தவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2022, 15:07