தேடுதல்

திருத்தந்தை, உலக மீட்பர் துறவு சபையினர் சந்திப்பு திருத்தந்தை, உலக மீட்பர் துறவு சபையினர் சந்திப்பு   (Vatican Media)

காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப தனிவரத்தை வாழுங்கள்.

தனது சொந்த பாதுகாப்புமீது பற்றுள்ளவர்கள், தூய ஆவியாரின் செயல்களுக்குத் தடையாக இருக்கின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஏழைகள் மற்றும், கைவிடப்பட்டோரை ஒருபோதும் மறக்காதிருந்து, அவர்களுக்கு ஆற்றிவரும் மீட்பின் நற்செய்திப் பணியைத் தொடரந்து ஆற்றுமாறு, உலக மீட்பர் துறவு சபையினரிடம் இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தன்னைச் சந்திக்க வந்திருந்த உலக மீட்பர் துறவு சபையின் பொதுப் பேரவையில் பங்குபெறும் ஏறத்தாழ 140 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இச்சபையின் தனிவரத்தின்படி வாழ்கின்ற அருள்சகோதரிகள் மற்றும், பொது நிலையினரை மனமுவந்து ஆசிர்வதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

உலக மீட்பர் சபையின் திருத்தூது வாழ்வை வழிநடத்த புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகம், நம் வரலாற்றில் அழகான மற்றும், சவால்நிறைந்த இக்காலக்கட்டத்தில், தாழ்ச்சி, ஒற்றுமை, ஞானம், மற்றும், தெளிந்துதேர்தலில் அச்சபையை வழிநடத்துமாறு பரிந்துரைத்துள்ள திருத்தந்தை, அச்சபையினரை சகாய அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பணி ஆண்டவருடையது என்றும், நம்மிடம் பணிக்கப்பட்ட யாவற்றையும் ஆற்றிய பணியாளர்கள் மட்டுமே நாம் (காண்க.லூக். 17:10) என்றும், சுய ஆதயத்தோடு தலைமைப்பணியை ஆற்றுவோர், சீடர்களின் காலடிகளைக் கழுவிய ஆண்டவருக்கு அல்ல, மாறாக உலகப்போக்கு மற்றும், தன்னலத்திற்காகவே பணியாற்றுகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

உலக மீட்பர் சபையினர் சந்திப்பு
உலக மீட்பர் சபையினர் சந்திப்பு

பொதுப் பேரவை பிரதிநிதிகள், தனித்துவம், மறைப்பணி, அர்ப்பண வாழ்வு, உருவாக்கம், நிர்வாகம் ஆகிய முக்கிய தலைப்புக்களில் கலந்துரையாடல்களை நடத்திவருவது குறித்து குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த அடிப்படையான தலைப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடையன எனவும், அவை அச்சபையின் தனிவரத்தின் ஒளியில் மீள்சிந்தனைக்கு அழைப்புவிடுக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

சபைக்கு மீள்உரு கொடுத்தல் மற்றும், புதுப்பித்தல் நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்கின்ற, கிறிஸ்துவின் பேருண்மை, குழு வாழ்வு, இறைவேண்டல் ஆகிய மூன்று தூண்கள் மறக்கப்படக்கூடாது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

புனித மரிய அல்போன்ஸ் லிகோரியாரால் ஆரம்பிக்கப்பட்ட உலக மீட்பர் சபையினர், 85 நாடுகளில் மறைப்பணியாற்றுகின்றனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 13:44