SONO FRANCESCO புத்தகத்திற்கு திருத்தந்தை அணிந்துரை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மென்மையான, இலகுவான, மற்றும் எப்போதும் உடைபட தயாரான மனித நேயம், சிதைபடவும் மறுஉருவாக்கம் பெறவும் தகுதி பெற்றது என்பதை Edith Bruck என்னும் எழுத்தாளரை சந்தித்தபோது தான் பெற்றதாகவும், அச்சந்திப்பு வலிமை, நம்பிக்கை மற்றும் நன்றி உணர்வினை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 21, இவ்வெள்ளிக்கிழமை முதல் நூலகத்தில் விற்பனைக்கு வந்துள்ள SONO FRANCESCO என்னும் புத்தகத்திற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, துன்பம் நிறைந்த வாழ்வில் ஒரு பெண்ணின் அமைதி, துன்பத்தில் ஒளிரும் வலிமை போன்றவற்றை கண்டு வியப்புற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று திருப்பீட சார்புதினத்தாள்( L’Osservatore Romano) பத்திரிக்கையில் Edith Bruck என்னும் ஹங்கேரிய நாட்டு எழுத்தாளரின் நேர்காணலை வாசித்த திருத்தந்தை, அவரை சந்திக்க விரும்பி உரோம் நகரில் அவரது இல்லம் சென்றதாகவும், அதன்பின் சாந்தா மார்த்தா இல்லத்தில் எடித் மற்றும் அவரின் உதவியாளர், உக்ரைன் நாட்டு ஒல்கா அவர்களைச் சந்தித்ததாகவும், அந்த அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1931 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த Edith Bruck என்பவர் சிறந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். 1954 ஆம் ஆண்டு உரோம் நகருக்குப் புலம்பெயர்ந்த இவர், இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனமான RAI ல் 1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை அங்கு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
91 வயது பெண்மணியான எடித் அவர்கள், தன் வாழ்வில் சந்தித்த துன்பங்கள், குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து பல்வேறு நாவல்கள் மற்றும் கட்டுரைகளை புத்தகங்களாக படைத்து வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்