சொமாலியாவில் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
சொமாலியா நாட்டுத் தலைநகர் Mogadishuவில் அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற இரட்டைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளவேளை, கடவுள் வன்முறை இதயங்களை மாற்றவேண்டும் என மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அழைப்புவிடுத்துள்ளார்
அக்டோபர் 30, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், சொமாலியாவில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, தீமை மற்றும், மரணத்தின்மீது கிறிஸ்து கண்ட வெற்றியைக் கொண்டாடும் இவ்வேளையில், இதில் இறந்தவர்களில் பலர் சிறார் என்றும், இறந்த அனைவருக்காவும் செபிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கை
அக்டோபர் 29, இச்சனிக்கிழமையன்று, Mogadishu நகரின் கல்வி அமைச்சக கட்டடத்திற்கு வெளியே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மற்றும், முன்னூருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இறந்தவர்களுள் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், கைம்பெண்கள், சிறார் போன்றோரும் உள்ளடங்குவர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அல்-கெய்தா அமைப்போடு தொடர்புடைய al-Shabab தீவீரவாதக் குழு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
உக்ரைனில் அமைதி
மேலும், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அங்கு அமைதி நிலவவும், அக்டோபர் 30, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்