உணவு பாதுகாப்பு அமைப்பிற்கு திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப்பற்றாகுறை மற்றும் வறுமை போன்றவற்றிற்கு அவசரகால தீர்வல்ல மாறாக நீடித்த நியாயமான தீர்வுகளே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உலக உணவு, மற்றும் வேளாண் நிறுவனத்திற்கு செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 16 ஞாயிறு கொண்டாடப்பட இருக்கின்ற உலக உணவு நாளுக்கு FAO என்னும் உலக உணவு, மற்றும் வேளாண் நிறுவனம் திருத்தந்தைக்கு கொடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்து அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பசியால் வாடும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் FAO அமைப்பினர்க்கு தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ள திருத்தந்தை, அனைவருக்குமான சிறந்த உற்பத்தி, ஊட்டச்சத்து, சூழல்,மற்றும் வாழ்க்கை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டு உலக உணவு நாள் சிறப்பிக்கப்படுவது இன்றைய சூழலில் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பாதிப்பினால் துன்புற்ற மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உருவான FAO அமைப்பு, மனித நேயம், ஒற்றுமை போன்றவற்றை உலகளாவிய வகையில் உருவாக்கி வருகின்றது எனவும், மூன்றாம் உலகப்போர் போன்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால மக்களின் உணவுப்பற்றாக்குறை மற்றும் வறுமைச்சூழல் போன்றவற்றை தீர்க்க நீடித்த நிலையான முடிவுகள் எடுப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
யாரையும் புறந்தள்ளாமல், சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சூழல் சிறந்த வாழ்க்கை என்பதே 77 ஆம் ஆண்டு உலக உணவு நாளின் கருப்பொருளாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்