திருத்தந்தை, பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 24, இத்திங்களன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துக் கலந்துரையாடினார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார், பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன்.
இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், சிறப்பாக, அந்நாட்டில் தலத்திருஅவையின் பணிகள், நாட்டின் பொது நலனை ஊக்குவிப்பதில் மதங்களின் பங்கு போன்ற தலைப்புகள் இடம்பெற்றன என்றுக் கூறியுள்ளது.
உலகின் பல்வேறு இடங்களில், குறிப்பாக உக்ரைனில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட்டு உரையாடல் தொடங்கப்படல், ஆயுதக்களைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தவர் பாதுகாப்பு உட்பட சில உலகளாவிய விவகாரங்கள், ஐரோப்பிய திட்டம் போன்றவைகளும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும், திருப்பீட ச்செய்தித் தொடர்பகம் கூறியது.
இச்சந்திப்புக்களின் இறுதியில் பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன் அவர்களும், அவரது மனைவி மற்றும், முக்கிய அரசுப் பிரதிநிதிகளும் திருத்தந்தையோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் திருத்தந்தைக்குப் பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.
திருத்தந்தையும், இவ்வாண்டு உலக அமைதி நாள் செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல் உட்பட தன் பல ஏடுகளையும், அரசுத்தலைவர் மக்ரோன் அவர்களுக்கு திருத்தந்தைப் பரிசாக வழங்கினார்
மேலும், அக்டோபர் 24, இத்திங்கள் காலை 8.30 மணியளவில், ஐரோப்பிய ரபிகள் அவையின் தலைவர் ரபி Pinchas Goldschmidt அவர்கள், திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தனியே சந்தித்து உரையாடினார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இதே நாளில், உரோம் நகரில் உயர்கல்வி பயிலும் அருள்பணியாளர்கள், குருத்துவ பயிற்சி மாணவர்கள் ஆகியோரையும் நண்பகல் 12 மணிக்கு திருப்பீடத்தில் சந்தித்து உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்