தேடுதல்

புனித பிரிஜித்தம்மாள் சபை மற்றும் புனித கம்போனியன் சபையினருடன்  திருத்தந்தை பிரான்சிஸ் புனித பிரிஜித்தம்மாள் சபை மற்றும் புனித கம்போனியன் சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

செபமே உங்கள் வாழ்வின் முதல் கடமையாகட்டும்- திருத்தந்தை

திருநற்கருணை முன் அமர்ந்து செபிப்பதன் வழியாக திருஅவை, சமுகம், உலகம் மற்றும் தங்கள் துறவு சபைக்கு, அமைதி மற்றும் உரையாடலின் கருவியாக திகழ முடியும். திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் -வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கடவுள்மனிதர், செபிக்கும் மனிதர் என்றும் அவரைப்போல அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொருவரும் செபத்தை தங்கள் வாழ்வின் முதல் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பிரிஜித்தம்மாள் சபை மற்றும் புனித கம்போனியன் சபையினரின் பேரவையை முன்னிட்டு அக்டோபர் 21  சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில்  அச்சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகளை சந்தித்து உரையாடியபோது இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் செபிப்பதற்கு கட்டாயம் நேரம் ஒதுக்கி செபிக்கும் கடவுள் மனிதர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, புனித பிரிஜித்தம்மாள் மற்றும் புனித டேனியல் கம்போனியன் வாழ்க்கையைப் பின்பற்றி நடக்கும் அச்சபை சகோதரிகளை, தனிவரத்தை வாழ்வாக்கவும், சபையின் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாதையில் பயணிக்கவும் வலியுறுத்தினார்.

உள்ளார்ந்த, மற்றும் சமூக புதுப்பித்தல்களுக்கு தொடக்கமாக இருக்கும் செபம் வாழ்வின் முதல் மற்றும் முக்கிய கடமை என்று வலியுறுத்திய திருத்தந்தை,  திருநற்கருணை முன் அமர்ந்து செபிப்பதன் வழியாக திருஅவை, சமுகம், உலகம் மற்றும் தங்கள் துறவு சபைக்கு, அமைதி மற்றும் உரையாடலின் கருவியாக திகழ முடியும் என்றும் கூறியுள்ளார்.

நம்வாழ்வில் இயேசுவை முன்னிலைப்படுத்தி வாழும்போது நமது வாழ்வு சிறப்பானதாக, பிறரன்புமிக்கதாக இருக்கும் என எடுத்துரைத்து, வார்த்தைகளில் கவனம் செலுத்தி இதயத்தை காக்க வேண்டும் எனவும், குடும்பம் போன்று ஒருவர் மற்றவர் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு வாழ  வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் போல செபிக்கும் மனிதர்களாக, செபத்தின் வழியாக இவ்வுலகில் அமைதியைக் கொண்டு வருபவர்களாக, தூய ஆவிக்கு கீழ்ப்படிந்து, இயேசு நம்மில் செயல்பட அனுமதிப்பவர்களாக வாழக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2022, 14:58