திருத்தந்தை: புலம்பெயர்ந்தோரைப் புறக்கணித்தல் குற்றமாகும்

புனித ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி புலம்பெயர்ந்தோருக்கு மறைப்பணியாற்ற துறவு சபைகளை ஆரம்பித்தவர். புனித சாத்தி, புலம்பெயர்ந்தவரின் மகன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி ஆகிய இரு புனிதர்களும், எல்லாரையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த திருஅவைக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றனர் எனவும், நம் வாழ்வு மற்றும், அதில் கடவுளின் இருத்தலுக்கு நன்றிகூறும் முறையை இப்புனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறியுள்ளார். 

அக்டோபர் 09, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10.15 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், அருளாளர்கள் ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி ஆகிய இருவரையும் புனிதர்களாக அறிவித்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல் புதுமையில், ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டிய அந்நோயாளிகள் குணமடைந்தபின்னர், அவர்களில் சமாரியர் ஒருவர் மட்டும், உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்ததை (லூக்.17:15) மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிணைந்து நடத்தல்

திருத்தந்தை திருப்பலி 091022
திருத்தந்தை திருப்பலி 091022

ஒன்றிணைந்து நடத்தல், நன்றிகூறுதல் ஆகிய இரு அம்சங்கள் குறித்த தன் சிந்தனைகளை மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, முதலில் ஒன்றிணைந்து நடத்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 

தொழுநோய், அந்நோயாளியை மற்றவரிடமிருந்து தனிமைப்படுத்தி, சமூகத்தின் விளிம்புகளிலும், ஏன், சமய வாழ்விலிருந்தும்கூடப் பிரித்து, அந்நோயால் தாக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்றாக இருக்கவைத்துள்ளது என்றும், இது, தனிமைப்படுத்தப்பட்ட, மற்றும், கடுந்துயருக்கு மத்தியில் வெளிப்படும் தோழமை குறித்து நாம் சிந்திப்பதற்கு பொருளுள்ளதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நாம் எல்லாருமே பலவீனமானவர்கள், மற்றும், குணப்படுத்தல் நமக்குத் தேவை என்ற உணர்வில், தந்தையாம் கடவுளின் இரக்கத்தின் தேவையில் அதிகமாக உள்ளோம் என்பதை, பாவிகளாக, நாம் நம் சொந்த நோய் குறித்து நம்மால் ஏற்க முடிந்தால், அப்போது நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகளாக, மேலும் அதிகமாக மாற முடியும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

கிறிஸ்தவ நம்பிக்கை, நம்மையும் கடந்து, கடவுள், மற்றும், சகோதரர் சகோதரிகளை நோக்கி நம்மை நடத்திச்செல்கிறது என்றும், அது ஒருபோதும் நமக்குள்ளே நம்மை முடக்கிவிடாது என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் மேலானவர்கள் என உணராமல், பலவீனமானவர்களாகிய நமக்கு குணப்படுத்தலும் மன்னிப்பும் தேவைப்படுகின்றன என்பதை, அது ஏற்க வைக்கின்றது என்றும் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து நடத்தல், திருஅவையின் முக்கிய மூலைக்கல் என உரைத்த திருத்தந்தை, நம் குடும்பங்கள், பணித்தளங்கள், நேரம் செலவிடும் இடங்கள் என எல்லாவற்றிலும் நற்செய்திக்குப் பணியாற்றுவதில் எல்லாருக்கும் திறந்த மனதாயும், எல்லாரையும் இணைத்தும் செயல்படுகிறோமா எனச் சிந்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

திருஅவையிலும், சமுதாயத்திலும் எப்போதும் எல்லாரையும் இணைத்துச் செயல்படும் சவாலை எதிர்கொள்கிறோம் எனவும், சமத்துவமின்மை மற்றும், புறக்கணிப்பு ஆகியவற்றின் பல வடிவங்களால், இந்நிலை இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் உரைத்த திருத்தந்தை, திருஅவையிலும், சமுதாயத்திலும் இன்று புலம்பெயர்ந்தோர் ஒதுக்கப்படுவது, அவமானம் மற்றும், குற்றச்செயல் என்று கூறினார்.

உண்மையில் புலம்பெயர்ந்தோரைப் புறக்கணித்தல், குற்றச்செயலாகும், இது அவர்களை, நம் முன்னாலே உயிரிழக்கச் செய்கிறது என்றும், இன்று மத்தியதரைக்கடல், உலகில் மிகப்பெரிய கல்லறையாக உள்ளது என்றும், புலம்பெயர்ந்தோரை ஓரங்கட்டுதல், நோயுற்றநிலையாகும், அது பாவம், அது குற்றமாகும் என்றும், திருத்தந்தை கூறினார். 

கடவுளுக்கு நன்றிகூறக் கற்றுக்கொள்தல்

இஞ்ஞாயிறு நற்செய்தியில், தொழுநோய் நீங்கப்பெற்ற பத்துப் பேரில் சமாரியராகிய ஒருவர் மட்டுமே கடவுளைப் புகழ்ந்தார், மற்றும், நன்றி கூறினார் எனவும், இவர் இயேசுவோடுள்ள உறவில் நுழையும்வண்ணம் அவரிடம் திரும்பிவந்தார் எனவும் கூறியத் திருத்தந்தை, சமாரியருக்கு குணம் பெற்றதைவிட நன்றிகூறுதலே மிக முக்கியம் என இயேசு உணர்த்தினார் என்றார்.

கடவுளோடுள்ள உறவு உட்பட அனைத்தையும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் அருவருப்பான ஆன்மிக நோய்க்கு அடிக்கடி உட்படும் நமக்கு, இது பெரிய பாடமாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, “உங்களுக்கு நன்றி” என்ற முக்கிய சொல்லாடலை மறக்காதீர்கள் எனக் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார். 

நம்பிக்கையின் இரு புனித மனிதர்கள்

திருஅவையில் இரு புதிய புனிதர்கள் 091022
திருஅவையில் இரு புதிய புனிதர்கள் 091022

ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி ஆகிய இரு புனிதர்களும், எல்லாரையும் ஒன்றிணைத்து வாழ்வது மற்றும், நன்றிகூறுதலுக்கு முன்மாதிரிகையாய் உள்ளனர் என்று திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தையோடு, அருளாளர் மற்றும், புனிதர்நிலைகளுக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்களும் நிறைவேற்றிய இக்கூட்டுத்திருப்பலியில் ஏறத்தாழ ஐம்பதாயிரம்  நம்பிக்கையாளர்கள் பங்குபெற்றனர்.

புனிதர்கள் ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி 

திருத்தந்தையின் திருப்பலியின்போது 091022
திருத்தந்தையின் திருப்பலியின்போது 091022

ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி (1839–1905), ஆர்த்தேமிதே சாத்தி (1880–1951) ஆகிய இரு புனிதர்களுமே, 19ம் நூற்றாண்டில் இத்தாலியில் பிறந்தவர்கள். இவர்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் புலம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கான இத்தாலியர்களுக்கும் மற்றவருக்கும் பணியாற்றியவர்கள். புனித ஸ்கலாபிரினி அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு மறைப்பணியாற்ற துறவு சபைகளை ஆரம்பித்தவர். புனித சாத்தி அவர்கள், தனது 16வது வயதில் 1897ஆம் ஆண்டில் தன் குடும்பத்தோடு அர்ஜென்டீனாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2022, 13:00