தேடுதல்

இஸ்பெயினின் இளம் தொழில் முனைவோர் சந்திப்பு இஸ்பெயினின் இளம் தொழில் முனைவோர் சந்திப்பு 

பொருளாதாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்த அழைப்பு

உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவும் பொருளாதாரத்தை பரிந்துரைக்கவேண்டிய அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பொருளாதார அமைப்பை பொது நலனுக்காக மாற்றுவதன் வழியாக, அனைவரும், குறிப்பாக ஏழைகள் மற்றும், விளிம்புநிலையில் உள்ளோர் பயன்பெற முடியும் என்று, அக்டோபர் 17, இத்திங்களன்று இஸ்பெயின் நாட்டின் தொழில்முனைவோர் குழு ஒன்றிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் தன்னைச் சந்திக்க காத்திருந்த, இஸ்பெயினின் இளம் தொழில் முனைவோர் கழகத்தின் ஏறத்தாழ ஐம்பது பேரை வரவேற்று வாழ்த்துக் கூறிய திருத்தந்தை, இவர்களின் இருப்பு, நம்பிக்கையின் ஓர் அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

பொருளாதார மற்றும், சமூக சமத்துவமின்மை நிலவும் ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம், உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவும் பொருளாதாரத்தை பரிந்துரைக்கவேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

தொழில்முனைவோர் தங்களின் தொழில் பயணத்தில் உதவுவதற்கு மூன்று கருத்துக்களை முன்வைத்துள்ள திருத்தந்தை, இறைவாக்கினர்களாக இருங்கள், உங்களின் ஆன்மிக நலனின் அடிப்படையில் பணியாற்றுங்கள், மற்றும், ஒவ்வொரு மனிதருக்கும் உதவும் பொருளாதாரத்தை உருவாக்குங்கள் என்று கூறியுள்ளார்.

இஸ்பெயினின் இளம் தொழில் முனைவோர் சந்திப்பு
இஸ்பெயினின் இளம் தொழில் முனைவோர் சந்திப்பு

இறைவாக்கினர் என்பவர், கடவுளின் சார்பாகப் பேசுபவர், மற்றும், அவர் வாழ்கின்ற சூழலில் மாற்றத்தைக் கொணர்வது குறித்த கடவுளது செய்தியை அறிவிப்பவர் எனவும், தொழில்முனைவோரும் இறைவாக்கினர்களாக, வாழ்வின் அனைத்து நிலைகளையும் மதித்து, அனைவரின் நலன்மீது அக்கறை காட்டி, அமைதியை ஊக்குவிக்கவேண்டும், மற்றும், பொதுவான இல்லத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இப்பூமியில் பயிரிட்டு அதை நன்றாகப் பராமரிக்கும்போது அது நிறையப் பலன்தருவதுபோல, கடவுளோடு உள்ள உறவை வளர்க்கும்போது அது வாழ்வுக்கு நல்ல பலன்தரும் என்றும், அனைத்தையும் அன்புக்காக ஆற்றுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வேலை மற்றும், வறுமையின் மதிப்பீடுகளை உணர்ந்தவர்களாய், வேலைவாய்ப்பை உருவாக்கி அயலவருக்கு மாண்பை வழங்குமாறு கூறியுள்ளார்.

அறநெறிக் கோட்பாட்டின்மீது அக்கறையுள்ள பொருளாதாரத்தைத் தொடர்ந்து உருவாக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனிதருக்குப் பணியாற்றுவதை மறக்கக்கூடாது என்றும், இஸ்பெயினின் இளம் தொழில்முனைவோரிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிஸ்டர்சியன் சபையின் பொதுப் பேரவை பிரதிநிதிகள்
சிஸ்டர்சியன் சபையின் பொதுப் பேரவை பிரதிநிதிகள்

மேலும், வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சிஸ்டர்சியன் சபையின் பொதுப் பேரவையில் பங்குபெற்ற ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளையும் இத்திங்களன்று சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 அக்டோபர் 2022, 14:13