மறைக்கல்வியுரை - ஆன்ம இருளை வெற்றி கொண்டு வாழுங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் மாதத்தின் இறுதி புதன் பொதுமறைக்கல்வி உரையில் செபமாலை செபிப்பதை சிறப்பாக வலியுறுத்தியும், தேர்ந்து தெளிதல் என்பது தொடக்க நிலை வழிமுறை அல்ல மாறாக அது கடவுள் நம் இதயத்துடன் பேசும் உணர்வுப்பூர்வமான செயல்முறை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வெறுமை, வருத்தம் என்னும் ஆன்ம இருள்களை வெற்றிகொள்வதன் வழியாக இறைவன் நம் ஆன்ம வளர்ச்சிக்கு என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் இப்புதன் பொதுமறைக்கல்வியுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால்,சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாக இரு; துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவுவரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். (சீராக் 2- 1,2,4,5)
புதன் பொதுமறைக்கல்வியுரை
ஆன்மீக ஆசிரியர்கள் கூறும் வெறுமை, சோதனை என்பது நமது ஆழமான துயர நிகழ்வுகளின் அனுபவங்கள், அமைதியற்ற நிலை, ஆறுதல் தரும் நம்பிக்கையிலிருந்தும் கடவுளிடமிருந்தும் தூரமாக இருத்தல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய ஆன்ம இருள்களின் வழியாக கடவுள் நமது ஆன்ம வளர்ச்சிக்குச் சொல்ல விரும்புவது என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுமை, சோதனை என்பது சில நேரங்களில் நமது பாவத்தையும், கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ள ஒரு அழைப்பாகவும் இருக்கின்றது. புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவது போல நமது உடல் வலியைப் போன்று வெறுமையும் நம் ஆன்மாவிற்கு வலியை உருவாக்கி ஆன்ம நலனிற்கு எச்சரிக்கை விடுக்கின்றது. சில நேரங்களில் செபம் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிமுறைகளில் தொய்வு ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் சோதனையாகவும் மாறுகின்றது. இச்சோதனைக்கு அடிபணியாமல் விடாமுயற்சியுடன் இச்சோதனை வழியாக நம் வாழ்வின் இறைத்திருவுளத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, நம்பிக்கை மற்றும் அன்பில் கடவுளுடன் ஆழமாக ஒன்றிணைய அவர் நமக்கு வழிகாட்டுவார்.
இவ்வாறு, தன் புதன் பொதுமறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார். குறிப்பாக அங்கு வந்திருந்த UNITRE என்னும் முதியோர்களுக்குப் பணியாற்றும் தேசிய இயக்கங்களையும், தனிமை மற்றும் முதியோர்களை ஓரங்கட்டுதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படும் அவ்வியக்கங்களின் செயல்பாடுகளையும், புதிய தலைமுறையினருக்கு, அதிகமான மனித மற்றும் கிறிஸ்தவ எதிர்காலத்தை உருவாக்கும் நினைவின் சாட்சிகளாக திகழும் முதியோர்களுக்கு பணியாற்றும் அவ்வியக்கத்தின் பணியாளர்களையும் வாழ்த்திப் பாராட்டினார். மேலும், உடன்பிறந்த உணர்வு, ஒற்றுமை, ஆன்மீக மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிகளை உருவாக்கும் மத்தியதரைக்கடல் கலை மற்றும் அறிவியல் பள்ளி மாணவப்பிரதிநிதிகளையும் வாழ்த்தினார்
இறுதியாக இளையோர், வயதில் மூத்தோர், புதிதாக திருமணமானவர்கள், ஆகியோரை வாழ்த்திய திருத்தந்தை அக்டோபர் மாத இறுதி வாரமாகிய இந்நாட்களில் செபமாலை செபிப்பதை சிறப்பாக வலியுறுத்தினார். எளிமையான, பரிந்துரையான, மரியன்னை பக்திமுயற்சியான இச்செபமாலை நம்பிக்கை மற்றும் தாராளமனம் கொண்டு கடவுளைப் பின்பற்ற நமக்கு வழிகாட்டும் என்று கூறி தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்