திருஅவையை நோக்கும்முறை 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்திடமிருந்து..
மேரி தெரேசா: வத்திக்கான்
திருஅவையை நோக்கும்முறையை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று, அப்பொதுச்சங்கம் தொடங்கியதன் அறுபதாம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 11, இச்செவ்வாய் மாலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என் ஆடுகளை மேய்” என்று இயேசு, புனித பேதுருவிடம் கூறிய வார்த்தைகள், நமக்கும், இன்றையத் திருஅவைக்கும் கூறப்படுவதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
“நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்ற ஆண்டவரின் கேள்விக்கு அப்பொதுச்சங்கம், ஒரு பெரும் பதிலுறுப்பதாக இருந்தது என்றும், திருஅவை ஆண்டவர் மீதுள்ள அன்பை உயிர்த்துடிப்புள்ளதாக்கும்வண்ணம், தன் இயல்பு மற்றும், மறைப்பணி குறித்து பரிசீலனை செய்யவும், சிந்திக்கவுமென, அது தன் வரலாற்றில் முதன் முறையாக பொதுச்சங்கம் ஒன்றிற்கு தன்னை அர்ப்பணித்தது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மூன்று வழிகள்
மேலிருந்து, கடவுளின் கண்களோடு, அன்புநிறைந்த கண்களோடு ஆகிய மூன்று வழிகளில், 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்திடமிருந்து திருஅவையை நோக்கும்முறையை நாம் கற்றுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்த திருத்தந்தை, நம் சொந்தக் கண்களிலிருந்து திருஅவையை நோக்கும் முறைக்கு எதிராக எச்சரிக்கைவிடுத்தார்.
முற்போக்கு, பழமைவாதம் ஆகிய இரண்டுமே பிரமாணிக்கமற்றதன்மையாக, கடவுளின் அன்புக்கு மேலாக, தங்களது சுய விருப்பங்கள் மற்றும் திட்டங்களை முன்வைக்கும் தன்னலத்தின் வடிவங்கள் என்று, அவற்றுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அதற்கு மாறாக, கடவுளுக்கு முதன்மை இடமளிக்கும்பொருட்டு, திருஅவைக்கு இன்றியமையாதது எது என்பதை பொதுச்சங்கத்திலிருந்து கண்டுணரவேண்டும் எனவும், ஆண்டவரோடும், அவர் அன்புகூரும் அனைத்து மனிதர்களோடும் பைத்தியக்கராத்தனமான அன்பில் வாழ்வதே, திருஅவைக்கு இன்றியமையாதது எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
என் ஆடுகளை மேய்
என் ஆடுகளை மேய் என்று பேதுருவிடம் கூறியபோது இயேசு இத்தகைய அன்பையே விரும்பினார் என்றும், முதலில் மீனவராக இருந்த பேதுருவை மேய்ப்பராக ஆக்கி, தம் ஆடுகள் மத்தியில் வாழவும், அவர்களை அன்புகூரவும் இயேசு பணித்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் வாழ்கின்ற திருஅவை, மற்றவரைக் கீழானவராக நோக்காமல், தன்னைச் சுற்றிலும் நடப்பதை நோக்குகின்ற ஒன்றாக, அது செயல்படவேண்டும் என்றும், நம் சொந்த வசதிகள் மற்றும், உறுதிப்பாடுகளுக்குள் முடங்கிவிடும் சோதனையைப் புறக்கணித்து வாழ்கின்ற திருஅவையாகச் செயல்பட அப்பொதுச்சங்கம் நமக்கு உதவுகிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
காணாமல்போன ஆடுகளைத் தேடவும், அவற்றை மீண்டும் மந்தையில் சேர்க்கவும் கடவுளின் அணுகுமுறையை திருஅவை கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திருஅவையில் ஒன்றிப்பு நிலவவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைவருக்கும் பணியாளர்களாக இருப்பதற்கு மாறாக, ஒருபக்கச் சார்பாக இருக்கும் நிலையைத் தெரிவுசெய்யும் கிறிஸ்தவர்களின் போக்கு குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, நாம் கிறிஸ்துவின் ஆடுகள் மற்றும், அவரது மந்தை, எனவே, நாம் ஒன்றிணைந்தே இருக்கவேண்டும் என்றும், நமது கூட்டொருங்கியக்கப் பண்பைக் கட்டிக்காக்கவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்