திருத்தந்தை: மனத்தாழ்மையுள்ளோரை கடவுள் உயர்த்துகிறார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
“ஆன்மிக ஆணவம்”, கடவுளை வணங்குவதைவிட தன்னலத்தை வணங்குவதற்கு இட்டுச்செல்லும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆற்றிய மூவேளை செப உரையில் எச்சரிக்கைவிடுத்தார்.
இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்ற பரிசேயர், வரிதண்டுபவர் ஆகிய இருவர் குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையை (லூக்.18,9-14) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, வரிதண்டுபவர், கடவுளின் திருமுன் தனது பாவநிலையை ஏற்று, தனக்கு இரங்குமாறு வேண்டினார் என்றும், இவ்வுவமை, ஒருவர் உயர்த்தப்படுவது, மற்றவர் தாழ்த்தப்படுவது ஆகிய இருவித இயக்கங்கள் பற்றிக் கூறுகிறது என்றும் குறிப்பிட்டார்.
உயர்வு மற்றும், ஆண்டவரைத் தேடுதல்
உயரே செல்தல் என்ற முதல் இயக்கம், விவிலியத்தில் பல இடங்களில் காணக்கிடக்கின்றது, ஆபிரகாம் பலிகொடுக்க மலைக்குச் சென்றார், கட்டளைகளைக் கொண்டுவருவதற்காக மோசே சீனாய் மலைக்குச் சென்றார், மற்றும், இயேசு தோற்றமாற்றத்திற்காக மலைக்குச் சென்றார் என்று கூறியத் திருத்தந்தை, உயரே செல்தல் என்பது, ஆண்டவரை நோக்கிச் செல்லும்வண்ணம், சோர்வான வாழ்விலிருந்து இதயத்தை விடுவித்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றது என்று விளக்கினார்.
உயரே செல்தல் என்பது, தன்னலம் என்ற மேட்டுநிலத்திலிருந்து எழும்பி ஆண்டவரை நோக்கி உயரே செல்வதாகும் எனவும், நாம் வாழ்ந்துவரும் பள்ளத்தாக்கில் உள்ளதை உள்ளபடியே ஆண்டவர்முன் கொணர்வதாகும் எனவும் திருத்தந்தை கூறினார்.
ஆண்டவரைச் சந்திப்பதற்கு நம்மை உயர்த்துவது என்பது, நாம் கீழே இறங்கவேண்டும், அதாவது, நம்மை அழுத்துகின்ற மனக்காயங்கள், பாவங்கள், மற்றும், சொந்தப் பலவீனங்களை ஏற்பதும், அவற்றை கண்ணாடியில் பார்ப்பதுபோன்று நேர்மையோடு பார்ப்பதும் ஆகும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனத்தாழ்மையோடு எவ்வளவிற்கு நம்மையே தாழ்த்துகிறோமோ, அவ்வளவுக்கு கடவுள் நம்மை உயர்த்துவார் என்று திருத்தந்தை விளக்கினார்.
தற்பெருமை குறித்து விழிப்போடு இருங்கள்
இவ்வுமையில் பரிசேயர், தன்னையும், மதம் சார்ந்த தன் பணிகளையும் புகழ்ந்து, மற்றவரை இகழ்வதால், அவர் தனது ஆன்மீக ஆணவத்தை வெளிப்படுத்துகிறார் என்றும், தன்னை நீதிமானாக ஏற்பது, தன்னலத்தை வணங்குவதற்கு இட்டுச்செல்லும் என்றும் இதனால் கடவுளுக்கு தன்னில் இடமளிக்காத நிலைக்கும் அவர் தன்னை ஆக்கிக்கொள்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
“நான்” என்பது தலைதூக்கி நிற்கின்ற இடத்தில் கடவுளுக்கு சிறிதளவே இடம் இருக்கும், அதேநேரம், உண்மையான மனத்தாழ்மையில், எவ்வித பாசாங்குத்தனமின்றி நாம் இருக்கும் உண்மைநிலையை அப்படியே கடவுளிடம் எடுத்துச்செல்லும் சக்தியுடையவர்களாக மாறுகிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உண்மையான மனத்தாழ்மையில், நம் இதயங்களை அழுத்துகின்ற காயங்கள், பாவங்கள் மற்றும், துயரங்களை கடவுளிடம் எடுத்துச்சொல்லி, அவர் நம்மை குணமாக்குமாறும், நம்மைப் பேணிப் பாதுகாத்து உயர்த்துமாறும் அவரின் இரக்கத்திற்காக மன்றாடுவதற்குத் திறனுள்ளவர்களாக மாறுவோம் என திருத்தந்தை கூறினார்.
நாம் எப்படி இருக்கிறோம் என்பதைவிட, நாம் எப்படி தோன்றுகிறோம் என்பதில் கருத்தாய் இருப்பதற்கு எழுகின்ற சோதனை, இறுதியில் தன்னையே அன்புகூர்வதில் நம்மைச் சிக்கவைக்கின்றது என்றும் எச்சரிக்கைவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியில், வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்து, தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்ற (காண்க.லூக்.1:52) ஆண்டவரின் தாழ்மையான பணியாளாகிய அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்றுரைத்து தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்