Talla Baja அர்ஜென்டீனா கால்பந்து குழுவினர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
வாழ்வில் எதிர்மறையாகத் தெரிவதைக்கூட முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வதே மனித முதிர்ச்சி என்றும், அர்ஜென்டீனாவின் Talla Baja கால்பந்து குழுவினர் அத்தகைய முதிர்ச்சி நிலையைத் தெரிவுசெய்வதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 26, இப்புதனன்று சந்தித்த Talla Baja கால்பந்து குழுவினரிடம் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, புதிய தளத்தில் கால்ஊன்றுவதற்கு அக்குழுவினரிடம் விளங்கும் துணிச்சலைப் பாராட்டியதோடு, அதை ஒருபோதும் இழந்து போகாமலிருக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.
இக்குழுவினர், தங்களின் அறிவு, உணர்ச்சி, மற்றும், உடல் ரீதியான மதிப்பீடுகளோடு வாழ்வில் துணிவோடு முன்னேறுமாறும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கையை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக நோக்கலாம் எனவும், எல்லாவற்றையும் எதிர்மறையாக நோக்குபவர்கள், எளிதில் சோர்ந்து போவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இக்குழுவினர்போன்று வாழ்வை நேர்மறையாக நோக்குபவர்கள், எத்துன்பத்தையும், முன்னேற்றத்தின் படியாக ஏற்று, இருப்பதை வைத்து முன்னோக்கி நடப்பவர்கள் எனவும் உரைத்த திருத்தந்தை, அக்குழுவினரை வாழ்த்தி ஆசிர்வதித்தார். அதோடு தனக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தை அக்குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்