அக்.09,2022ல் அருளாளர்கள் Scalabrini,Zatti புனிதர்களாக அறிவிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வாண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றவிருக்கும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு தியெகோ ரவெல்லி (Diego Ravelli) அவர்கள், செப்டம்பர் 08, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் 13, வருகிற செவ்வாய் முதல் 15 வியாழன் வரை கஜகஸ்தான் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 25, திருவழிபாட்டு ஆண்டின் 26ம் ஞாயிறன்று மேய்ப்புப்பணி பயணமாக, இத்தாலியின் மத்தேரா நகருக்குச் செல்வார்.
அக்டோபர் திருவழிபாடுகள்
திருவழிபாட்டு ஆண்டின் 28ம் ஞாயிறாகிய அக்டோபர் 9ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.15 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், அருளாளர்கள் Giovanni Battista Scalabrini, Artemide Zatti ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கும் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 11ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுத் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுவார்.
நவம்பர் திருவழிபாடு
நவம்பர் 2ம் தேதி, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, இவ்வாண்டில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் ஆன்மாக்களின் நிறையமைதிக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்