தேடுதல்

கார்கிவ் ஆயர் பவுலோ வத்திக்கான் செய்திகளுக்கு பதிலளித்த போது  கார்கிவ் ஆயர் பவுலோ வத்திக்கான் செய்திகளுக்கு பதிலளித்த போது  

இதயத்திலிருந்து உரையாடுதல்: அன்பின் அடிப்படையில் உண்மை பேசுதல்

நீதி, உடன்பிறந்த உணர்வு, மனிதாபிமானம் நிறைந்த வருங்காலம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் ஒரு பணியாக, சமூகத்தொடர்பாளர்கள், தங்களது பணியை நோக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

இதயத்திலிருந்து உரையாடுதல்: அன்பின் அடிப்படையில் உண்மை பேசுதல்(எபே.4:15) என்பது, 2023ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்படும் 57வது உலக சமூகத்தொடர்பு நாளுக்குரிய கருப்பொருளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவுசெய்துள்ளார் என்று, செப்டம்பர் 29, இவ்வியாழனன்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

“இதயத்தின் செவியிலிருந்து உரையாடுதல்” என்ற 2022ஆம் ஆண்டின் உலக சமூகத்தொடர்பு நாளின் தலைப்போடு, 2023ஆம் ஆண்டின் உலக சமூகத்தொடர்பு நாளுக்குரிய தலைப்பும் தொடர்புகொண்டுள்ளது என்றும் அத்தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த தலைப்பானது, 2023ஆம் ஆண்டு அக்டோபரில், ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றக் கொண்டாட்டத்திற்கு, கத்தோலிக்கத் திருஅவை முழுவதையும் இட்டுச்செல்லும் பாதையின் ஒரு பகுதியை அமைக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதயத்திலிருந்து உரையாடுதல் என்பது, எதிர்நோக்கிற்கு ஒரு காரணத்தை (1 பேது.3:14-17) வழங்குவதைக் குறிக்கின்றது என்றும், சமூகத்தொடர்பை ஒரு கொடையாகப் பயன்படுத்தி இவ்வாறு உரையாடுகையில், அது ஒரு சுவராக இல்லாமல், அனைவரையும் இணைக்கின்ற பாலமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் போர் இடம்பெறும் சூழலில், வெறுப்பைக் கொணராத சமூகத் தொடர்புகள் எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றன என்றும், மற்றவரோடு உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தொடர்பு, போரைத் தொடுக்கும் மனநிலையை அகற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2022, 14:16