பிறரன்பு, தீமையின் சக்திகளை அகற்றும் வல்லமை கொண்டது
மேரி தெரேசா: வத்திக்கான்
புனித பாத்ரே பியோ அவர்கள், தன் வாழ்வு முழுவதும், தாழ்ச்சி, பணிவு, மற்றும், அன்புக்காகத் துன்பங்களை ஏற்றதன் வழியாக, தீமைக்கு எதிராகப் போராடினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
Pietrelcinaவின் புனித பாத்ரே பியோவின் திருநாள் சிறப்பிக்கப்பட்ட செப்டம்பர் 23, இவ்வெள்ளியன்று, அப்புனிதரின் வாழ்வை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, நம்பிக்கையால் தூண்டுதல் பெற்ற பிறரன்பு, தீமையின் சக்திகளை அகற்றும் வல்லமை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புனித பாத்ரே பியோ
இத்தாலிய கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளரான புனித பாத்ரே பியோ அவர்கள், பக்தி மற்றும், பிறரன்பு வாழ்வால் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். ஐந்து காய வரத்தையும் பெற்றிருந்தவர் இவர்.
1887ஆம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி இத்தாலியின் Pietrelcinaவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த புனித பாத்ரே பியோ அவர்கள், சிறு வயதிலேயே பக்தியில் வளர்ந்தவர். தவத்தின் மீதுள்ள ஆர்வத்தால், கல் தரையில் இவர் படுத்தபோது, தாய் இவரைக் கண்டித்துள்ளார் என்று கூறப்படுகிறது. Francesco Forgione என்ற திருமுழுக்குப் பெயரைக்கொண்டிருந்த இவர், தனது 15வது வயதில் கப்புச்சின் துறவு சபையில் சேர்ந்தார். திருத்தந்தை முதலாம் பயஸ் அவர்கள் மீதுள்ள மதிப்பால் "Pio" என்ற பெயரை இவர் ஏற்றார். அத்திருத்தந்தையின் திருப்பொருள்களை தனது ஊரின் சிற்றாலயத்தில் அடிக்கடி பார்த்து வந்ததால், பாத்ரே பியோ அவர்கள், இப்பெயரைத் தெரிவுசெய்தார் எனச் சொல்லப்படுகிறது.
இவர் 1910ஆம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக, இவர் இல்லத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிலை உருவானது. செப நேரங்களில் பரவசநிலைக்குச் செல்வார் என்றும் சொல்லப்படுகிறது.
1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி தன் கரங்கள் மற்றும், காலடியில் வலியை உணர்ந்த இவர், அவை கிறிஸ்துவின் காயங்கள் என அறிந்தார். இறுதியில், 1919ஆம் ஆண்டில் இவர் ஐந்து காய வரம் பெற்றிருந்தது எங்கும் பரவத்தொடங்கியது. இவர் வாழும்போதே புதுமைகளும் ஆற்றியுள்ளார்.
1968ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இறைபதம் சேர்ந்தார், அருள்பணி பாத்ரே பியோ. 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இவரைப் புனிதராக அறிவித்தார். புனித பாத்ரே பியோ, வளர்இளம் பருவத்தினர், Pietrelcina கிராமம், மற்றும், பொதுமக்கள் பாதுகாப்புப்பணி தன்னார்வலர்களின் பாதுகாவலர் ஆவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்