தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார் 

உலகின் அனைத்து அன்னையர்க்காக திருத்தந்தை செபம்

இளம் கைதிகள் சிறைகளில் தற்கொலைசெய்துகொள்ளும் ஆபத்துக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற, அன்னையரின் அன்பு உதவும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மரியா, ஒரு மகளாக, மற்றும், அருள்மிகப் பெற்றவராக, கடவுளின் கனிவன்பை அனுபவித்தவர், இதன்வழியாக மரியா, ஓர் அன்னையாக, தமது திருமகன் இயேசுவின் பணியில் ஒன்றித்திருப்பதன் வழியாக, இவ்வன்பை நமக்குத் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 08, இவ்வியாழனன்று திருஅவை சிறப்பித்த அன்னை மரியாவின் பிறப்பு விழாவை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இன்று அனைத்து அன்னையரோடும் தனது அருகாமையைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நோயால் துன்புறுகின்ற, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றும், சிறையிலுள்ள  பிள்ளைகளைக் கொண்டிருக்கும் அன்னையரோடு சிறப்பான முறையில் எனது உடனிருப்பைத் தெரிவிக்கிறேன் எனவும், தங்களின் பிள்ளைகள் எதிர்கொள்ளும் துன்பங்களால் வேதனைப்படும் அனைத்து அன்னையருக்கும் அன்னை மரியா ஆறுதலாய் இருப்பாராக எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

புதன் பொது மறைக்கல்வியுரையில் அன்னையர்க்காக...

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 7, இப்புதனன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னர் அனைத்து அன்னையரை, குறிப்பாக, நோய், புறக்கணிக்கப்பட்டநிலை, சிறைத்தண்டனை போன்றவற்றால் துயருறும் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் அன்னையரை சிறப்பாக நினைவுகூர்வதாகத் தெரிவித்தார்.

அவர்களோடு தனக்கிருக்கும் அருகாமைக்கும் உறுதி கூறியத் திருத்தந்தை, கைதிகளின், குறிப்பாக இளம் கைதிகளின் அன்னையர்க்கு சிறப்பாக செபம் செய்ய நமக்கு அழைப்புவிடுத்தார். இதனால் அவ்வன்னையர் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பார்கள் எனவும், சிறைகளில் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர், சிலநேரங்களில் இளம் கைதிகளும் அவ்வாறு செய்கின்றனர், இத்தகைய ஆபத்துக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற, அன்னையரின் அன்பு உதவும் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இங்கிலாந்து மற்றும், வேல்சில் 2018ஆம் ஆண்டில் மட்டும் 92 கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2022, 15:14