தேடுதல்

திருச்சிலுவை வழி நம்மை மீட்ட இயேசு

திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவான செப்டம்பர் 14 இப்புதனன்று, கஜகஸ்தானின் நூர் சுல்தான் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெற்ற திருப்பலியில் நம்மை மீட்கும் திருச்சிலுவைக் குறித்து மறையுரை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சிலுவை என்பது மரணத்தின் மேடையாகக் கருதப்பட்டாலும்,  நமது பாவம் மற்றும், உலகின் தீமையை அவரின் சிலுவை மரத்தோடு ஏற்றுக் கொண்டு, உலக மக்களை அன்பால் வெற்றி கொண்ட இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவையின் மகிமையைக் கொண்டாடுகின்றோம். இன்றைய இறைவார்த்தைகள் கடிக்கும் பாம்பிலிருந்து  மீட்கும் பாம்பை எவ்வாறு வேறுபடுத்த வேண்டும் என்பது பற்றி எடுத்துரைக்கின்றன.

கடிக்கும் பாம்பு

இறைவனுக்கு எதிராகப் பேசி, பாவம் செய்த மக்களை இப்பாம்புகள் கடித்தன. கடவுளுக்கு எதிராக இப்படி பேசுவது முணுமுணுப்பதையும் குறைகூறுவதையும் விட ஆபத்தானது. இன்னும் ஆழமாகப் பார்த்தோமானால், இஸ்ரயேல் மக்கள் கடவுள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கான அடையாளமாகவும் இது அமைந்திருக்கின்றது.  வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் பாலைவனத்தின் வழியாகக் கடந்து சென்ற கடவுளின் மக்கள் தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் சோர்வடைந்தனர். நம்பிக்கையை இழந்த மக்கள் இறுதியில்  கடவுளின் வாக்குறுதியையும் மறந்து, வளமான நாட்டை நோக்கி வழி நடத்துகின்றவர் நம் கடவுள் என்பதை நம்பும் வலிமையையும் இழக்கின்றனர்.

கடவுளை நம்பாத மக்கள் பாம்பினால் கடிபட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. திருவிவிலியத்தில் தொடக்க நூல் புத்தகத்தில் குறிப்பிடப்படும் முதல் பாம்பு, ஆதாம் ஏவாள் இதயத்தை விஷமாக்கி, கடவுள் பற்றிய சந்தேகங்களை உருவாக்கி சோதிக்கும் அலகையாகப் பாம்பின் உருவில் வந்தது. ஆதாம் ஏவாளை ஏமாற்றி,  அவநம்பிக்கை விதைகளை விதைத்து, கடவுள் நல்லவரல்ல என்றும், அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் கடவுள் என்று எண்ணும்படியாகவும் மாற்றியது. பாலைவனத்தில் இப்பாம்பு இந்த முறை “கொள்ளி வாய்ப்பாம்பாக  தோன்றுகின்றது. வேறுவார்த்தையில் சொல்வதென்றால் பாவம் மீண்டும் திரும்புகின்றது. இஸ்ரயேல் மக்களும் கடவுளை சந்தேகித்து, அவர்களுக்கு வாழ்வளித்த கடவுள் மேல் குற்றம் சுமத்துகின்றார்கள். குழப்பம் விளைவிக்கின்றார்கள். இதனால் தங்களது மரணத்தை சந்தித்து நம்பிக்கையற்றவர்களின் முடிவு இதுதான் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள்.

 அன்பான சகோதரர் சகோதரிகளே, இம்முதல் பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில், இறைவன்  மீதும் ஒவ்வொரு மனிதர்மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கையின் தருணங்களை ஆய்வு செய்து பார்க்க அழைக்கின்றது. எத்தனை முறை நம்முடைய வறட்சி, மனமுடைவு, பொறுமையற்ற தன்மை போன்றவற்றால் நமது உள்ளத்தின் சொந்த பாலைவனத்தில் தவித்து இலக்கு நோக்கியப் பாதையைத் தவறவிட்டிருக்கின்றோம். இந்நாட்டிலும் பாலைவனம் உள்ளது. இவ்விடம் நம் இதயங்களில் தங்கியிருக்கும் சோர்வு மற்றும் வறட்சியை நினைவுபடுத்துகின்றது. தோல்விகள் மற்றும் சோர்வுகள் இறைவனை நோக்கிப் பார்க்கும் வலிமையை இழக்கின்ற சூழல்களை உருவாக்குகின்றன. இத்தகையச் சூழலில் நமது தனிப்பட்ட வாழ்வில், திருஅவை மற்றும் சமூக வாழ்வில் ஏமாற்றம், விரக்தி, அவநம்பிக்கை, என்னும் பாம்புகளால் கடிபட்டு, உற்சாகமிழந்து காணப்படுகின்றோம்.

 திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறியது போல கஜகஸ்தான், உடன் பிறந்த உறவில், உரையாடலில், புரிந்துகொள்ளுதலில் வளர்ந்து, பிறமக்கள், நாடுகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒற்றுமையின் ஒன்றிணைந்த பாலங்களை கட்ட முயலவேண்டும்.  இறைவனில் நமது நம்பிக்கையை புதுப்பித்து முன்னோக்கிச் செல்ல சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை உற்றுநோக்கிப் பார்த்து அவரின் உலகளாவிய சிலுவை அன்பைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நூர் சுல்தான் திருப்பலியில் பங்கேற்ற மக்கள்
நூர் சுல்தான் திருப்பலியில் பங்கேற்ற மக்கள்

இரண்டாவது உருவமான மீட்கும் பாம்பு.

இஸ்ரயேல் மக்கள் கொள்ளி வாய்ப் பாம்பினால் கடிபட்டு இறந்துகொண்டிருக்கும்போது  ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார் .அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். என்றார். (எண்ணிக்கை:21:8) விஷப்பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மோசேக்கு வழி சொல்லும் இறைவன் அப்பாம்புகளை அழிக்கவில்லை. கடவுளின் இச்செயல் மனித வாழ்வில் ஏற்படும் துன்பம், பாவம், அவநம்பிக்கை போன்றவற்றைக் கையாள வழிகாட்டுகின்றது. 22 யோவான் நற்செய்தியில் குறிப்பிடுவதுபோல “பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்”. (யோ:3:.14,15). இதுதான் உறுதியான மாற்றம். நம்மை மீட்கும் பாம்பு நம் நடுவில் வந்து விட்டது. நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு, மரணத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாம்பின் விசத்தன்மையை அகற்றி, புதிய வாழ்வைத் தருகின்றார். நாம் அவரைப் பார்க்கும் போது பாவம், துன்பம்,   அனைத்தையும் அதன் ஆற்றலையும் அழித்துவிடுகின்றார். 

அன்பான சகோதர சகோதரிகளே இது தான் நமது மீட்பின் பாதை, மறுவாழ்வு மற்றும் உயிர்ப்புக்கான பாதை. சிலுவையின் உயரத்திலிருந்து நாம் நமது வாழ்க்கையையும், நமது மக்களின் வரலாற்றையும் வேறு வழியில் பார்க்கலாம். சிலுவையில் தொங்கும் இயேசுவிடமிருந்து, வெறுப்பை அல்ல அன்பை, வேறுபாட்டை அல்ல இரக்கத்தை, பகைமையை அல்ல மன்னிப்பைக் கற்றுக்கொள்கின்றோம். அவரின் நீட்டிய கரங்கள், இறைவனின் மென்மையான அரவணைப்பை வெளிப்படுத்தி, இவ்வன்பினை ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தவே நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை  நினைவுபடுத்துகின்றன. இதுவே கிறிஸ்தவத்தின் வழி.  இது பதவி, ஆற்றல் தகுதி போன்றவற்றினால் வருவதல்ல. தன் மக்களுக்காகத் தன் உயிரையே கொடுத்த இயேசுவின் மீட்பின் வழி. தன் உடன்சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படாது, தாழ்ச்சி,  உலகளாவிய அன்பு கொண்ட தன்னிகரற்ற வழி.  ஆம், சிலுவையின் வழியாக, இயேசு அலகையின் தீமையை அகற்றி விட்டார். கிறிஸ்தவராக இருப்பது என்பது, தீமை இல்லாமல் ஒருவர் மற்றவரைத் துன்புறுத்தாமல், புறங்கூறாமல் குறைசொல்லாமல் இருப்பது மற்றும் பூமியைப் பாவத்தினால் மாசுபடுத்தாமல் இருப்பதாகும். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் துளையுண்ட காயங்களிலிருந்து நாம் பிறப்பெடுத்துள்ளோம். எனவே, சாவின் தீமையிலிருந்து விடுதலைப் பெற்று, இறைவனின் அருளால் முழுமையான கிறிஸ்தவர்களாக, அன்பும் அமைதியும் கொண்டு, மகிழ்வான சான்று தரும் புதிய வாழ்வு வாழ, அனைவருக்காகவும் செபிக்கின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2022, 14:43