தேடுதல்

புனித வின்சென்ட் தெ பவுல் புனித வின்சென்ட் தெ பவுல்  

"இயேசுவின் வாழ்வு" புதிய நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் எழுதியுள்ள "இயேசுவின் வாழ்வு" நூல், இச்செவ்வாயன்று விற்பனைக்கு வந்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

பசியாய், தாகமாய், அந்நியராய், ஆடையின்றி, மாண்பின்றி, நோயாய், மற்றும், கைதியாய் இருக்கின்ற நம் சகோதரர் சகோதரிகளில் ஆண்டவராம் இயேசுவைக் கண்டுணரும் அருளை, திருஅவையும், நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டுமென்று செபிக்கின்றேன் என, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட புனித வின்சென்ட் தெ பவுல் திருநாளை மையப்படுத்தி, பிறரன்பு, புனித வின்சென்ட் தெ பவுல் என்ற ஹாஷ்டாக்குகளுடன் (#Charity #SaintVincentDePaul) வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை எழுதியுள்ளார்.

"இயேசுவின் வாழ்வு" என்ற புதிய நூல்

"இயேசுவின் வாழ்வு"  புதிய நூல்
"இயேசுவின் வாழ்வு" புதிய நூல்

மேலும், "இயேசுவின் வாழ்வு" என்ற புதிய நூல், அவரைச் சந்திப்பதற்கும், அவரோடு நெருங்கிய உறவு கொள்ளவும் உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களின் இந்நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று விற்பனைக்கு வந்துள்ள "இயேசுவின் வாழ்வு" என்ற நூலில், கிறிஸ்துவின் வாழ்வு குறித்த தன் சொந்த அனுபவங்கள், நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளின் வரலாற்றுச் சூழல், திருத்தந்தையின் கருத்துக்கள் போன்றவற்றை, தொர்னியெல்லி அவர்கள் எழுதியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ்

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை வாசிக்கும்போதெல்லாம் கிறிஸ்துவின் வாழ்வின் நிகழ்வுகள் அடிக்கடி மனதில் வருகின்றன, எடுத்துக்காட்டாக, இயேசு தன்னைப் பார்க்காமல், ஆனால் அவரைப் பார்ப்பதற்காக மரத்தில் ஏறிய சக்கேயுவை இயேசு பார்த்தார், அவர் சக்கேயுவின் வீட்டிற்குச் செல்ல விரும்பினார் என்று உடனடியாக மனதில் பதிகின்றது எனக் கூறியுள்ளார்.

அதேபோல் பார்வையிழந்த எரிக்கோ மனிதர், அந்நிலையிலும் ஆண்டவரின் பார்வை தன்மீது படும் வழியைத் தேடினார், இயேசுவால் அவர் பாரக்கப்பட விரும்பினார், அதனால் அவர் கெஞ்சிக்கேட்ட பெருங்குரலால் அவரது பார்வை இயேசுவின் மீது பட்டது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இயேசுவை எப்போதும் சோதிக்கும் நோக்கத்தில் அவரை அணுகிய மறைநூல் அறிஞர்களின் பார்வை உள்ளது என்றும், ஒவ்வொருவரும் இயேசுவைப் பார்த்தமுறை முக்கியமானது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

இயேசுவைச் சந்தித்த மக்களும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவிதம் முக்கியமானது என்றும், நற்செய்தி நிகழ்வுகளை வெறுமனே வாசித்தால் மட்டும் போதாது, மாறாக அந்நிகழ்வுகளில் உள்ளூர நுழைவது அழகானது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இயேசுவை நம் மனத்திலும் இதயத்திலும் பதியவைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டுள்ள இயேசுவின் வாழ்வு என்ற இந்நூல், இயேசுவோடு தொடர்புகொள்ள உதவுகிறது, அதன் வழியாக, அவர் நம் வாழ்வில் மாபெரும் மனிதராக, வரலாற்று நாயகனாக, ஒரு மதத் தலைவராக, அறநெறிப் போதகராக நிலைத்திராமல், தினமும் நம் ஒவ்வொருவரின் ஆண்டவராக மாறுவார்,   என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலை வாசிப்பவர்கள், இயேசுவைப் பார்ப்பார்கள், அவரைச் சந்திப்பார்கள், தூய ஆவியாரின் கொடையாகிய அவர் அருளைப் பெறுவார்கள், அவரால் கவரப்பட தங்களை அனுமதிப்பார்கள் என நம்புகிறேன் எனவும், திருத்தந்தை தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2022, 14:45