அரசி எலிசபெத்தின் அடக்கச்சடங்கில் திருத்தந்தையின் பிரதிநிதி
மேரி தெரேசா: வத்திக்கான்
“ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற செயல்கள் வழியாக, நம் வாழ்வை சிறப்பானதாக அமைப்பதற்கு ஆண்டவர் விரும்புகிறார்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
இம்மாதம் முதல் நாளிலிருந்து திருஅவையில் படைப்பின் காலம் சிறப்பிக்கப்பட்டு வருவதையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 17, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
அரசி எலிசபெத்தின் அடக்கச் சடங்கில் திருத்தந்தையின் பிரதிநிதி
பிரித்தானியாவில், செப்டம்பர் 19, வருகிற திங்களன்று நடைபெறும் அரசி 2ம் எலிசபெத் அவர்களின் அடக்கச்சடங்கில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், செப்டம்பர் 16 இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் பிறந்த 68 வயது நிரம்பிய பேராயர் காலகர் அவர்கள், 2014ஆம் ஆண்டிலிருந்து திருப்பீடச் செயலகத்தில் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
1984ஆம் ஆண்டிலிருந்து திருப்பீடத்தின் தூதரகப் பணிகளை ஆற்றிவருகின்ற பேராயர் காலகர் அவர்கள், 2012ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை, ஆஸ்திரேலியாவில் திருப்பீடத் தூதுராகப் பணியாற்றியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சிசெய்த அரசி 2ம் எலிசபெத் அவர்கள், தனது 96வது வயதில், ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் மாளிகையில் இம்மாதம் 08ம் தேதி இறைபதம் சேர்ந்தார். அரசி 2ம் எலிசபெத் அவர்களின் இம்மண்ணக வாழ்வுக்கு இறுதி வழியனுப்பும் நிகழ்வு, செப்டம்பர் 19, வருகிற திங்களன்று, இலண்டன் நகரின் வெஸ்ட்மின்ஸ்டர் ஆலயத்தில் நடைபெறும்.
அரசி 2ம் எலிசபெத் அவர்கள், 16ம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்துசென்ற இங்கிலாந்து ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் புறங்காவலரும் ஆவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்