தேடுதல்

திருத்தந்தை, பஹ்ரைன் அரசரின் சிறப்பு பிரதிநிதி Sheikh Kahlid vin Ahmed Al Khalifa (25.11.2021) திருத்தந்தை, பஹ்ரைன் அரசரின் சிறப்பு பிரதிநிதி Sheikh Kahlid vin Ahmed Al Khalifa (25.11.2021) 

நவம்பர் 3-6, 2022ல் பஹ்ரைனில் திருத்தூதுப் பயணம்

பஹ்ரைனின் அரசு மற்றும், தலத்திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் செல்லவிருக்கிறார் - மத்தேயோ புரூனி

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு நவம்பர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை பஹ்ரைன் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், செப்டம்பர் 28, இப்புதனன்று அறிவித்துள்ளார்.

“பஹ்ரைன் உரையாடல் அவை: மனித நல்லிணக்க வாழ்வுக்கு கிழக்கு மற்றும், மேற்கு” என்ற தலைப்பில் பஹ்ரைனில் நடைபெறும் கருத்தரங்கையொட்டி, அந்நாட்டிற்குத் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்றும், புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

வருகிற நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை பஹ்ரைனில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் Manama மற்றும், Awali நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் என்றும், இப்பயணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், புரூனி அவர்கள் மேலும் அறிவித்துள்ளார்.

பெர்சிய வளைகுடாப் பகுதி நாடான பஹ்ரைனின் அரசு மற்றும், தலத்திருஅவை  அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாக அந்நாட்டிற்குச் செல்லவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை, அரசர் Hamad bin Isa Al Khalifa சந்திப்பு

2014ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி திருப்பீடத்தில், பஹ்ரைன் அரசர் Hamad bin Isa Al Khalifa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார். அச்சந்திப்புக்குப்பின் பஹ்ரைன் அரசர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் முன்னாள் செயலர் பேராயர் Dominique Mamberti அவர்களையும் சந்தித்தார்.

அச்சந்திப்புக்களின்போது, அந்நாட்டில் கத்தோலிக்க சமுதாயம் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு அரசர் நன்றி தெரிவித்து, பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 12:59