கல்வி, எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கல்வி எப்போதும் உண்மையைத் தேடுவதாய் அமைந்திருக்கவேண்டும் என்று, செப்டம்பர் 12, இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சுவிட்சர்லாந்து நாட்டு மாணவர் சமுதாய அமைப்பின் 160 உறுப்பினர்களை சந்தித்தபோது கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சுவிட்சர்லாந்து நாடு மற்றும், அந்நாட்டு மாணவர் சமுதாய அமைப்பின் பாதுகாவலருமான Nicola di Flüe அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ள இம்மாணவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளாக இருப்பது என்பது, உண்டு உடுத்தி வாழ்வதில் திருப்தி அடைந்துகொண்டிருப்பது அல்ல, மாறாக உண்மையாகவே வாழ்வதற்கு விரும்புவதாகும் என்று கூறியுள்ளார்.
உலகில் பலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு இல்லாதபோது, உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புக்கு கடவுளுக்கு நன்றி கூறுவோம் என அம்மாணவர்களிடம் கூறியுள்ள திருத்தந்தை, கல்வி கற்பதற்கு இருக்கின்ற உலகளாவிய உரிமை செயல்வடிவம் பெறுவதற்கு, சில தெளிவான நடவடிக்கைகள் வழியாக ஊக்கப்படுத்துமாறு, இந்த அமைப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவராக இருப்பது, திருப்பயணியாக இருப்பது, இவை இரண்டிற்கும் இடையே ஓர் அழகான ஒப்புமை உள்ளது எனவும், படிப்பது ஒரு பயணம் எனவும், மாணவர்கள் என்பது ஒருவிதத்தில் வாழ்வுமுழுவதுமே அவ்வாறு இருப்பது என்பதை இந்த அமைப்பு நினைவுபடுத்துகிறது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, ஒரு மனித மனநிலையாக, படிக்கும் படிப்பு, எப்போதும் பேணி வளர்க்கப்படவேண்டும் என்றும், இயேசு கிறிஸ்துவே, வரலாற்றில் மிகப்பெரும் ஆசிரியர் என்றும் கூறியுள்ளார்.
இறைத்தந்தையின் அன்பு மற்றும், தூய ஆவியாரின் செயலால் இயேசு, பழைய மனிதரை எடுத்துவிட்டு புதிய மனிதரைக் கொணர்கிறார் என்றும், அவர், தாண்மை என்ற அடிமைமுறையிலிருந்து விடுதலையளித்து கடவுளோடு உள்ள உறவில் வாழ்வின் முழுமையை நமக்குத் திறந்து காட்டுகிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மனித வாழ்வை நமக்கு நிறைவாகத் தருகிறவர் (யோவா.10:10) இயேசு ஒருவர் மட்டுமே என்றும் உரைத்த திருத்தந்தை, மாணவர்களாகிய நீங்கள் இறைவார்த்தையின் மாணவர்களா? விவிலியத்தை, நற்செய்தியை வாசிக்க சிறிது நேரம் ஒதுக்குகிறீர்களா? ஒருவித தாகத்தோடு பயணம் செய்பவர்களாகிய நீங்கள், கடவுளைத் தேடுபவர்கள் என உணருகிறீர்களா? இயேசுவின் சீடர்கள் என உணர்ந்து, அவர் பேசுவதைக் கேட்கின்றீர்களா, அவரிடம் கேள்வி கேட்கின்றீர்களா, அவரது சொல்லாடல்களையும் செயல்களையும் தியானிக்கின்றீர்களா? போன்ற கேள்விகளையும் அம்மாணவரிடம் எழுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவை நினையுங்கள், உங்கள் நினைவுகளிலும் இதயங்களிலும் அவர் நுழைய அனுமதியுங்கள், ஏனென்றால் அவர் நம் அனைவரின் இதயக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார் என்றுரைத்து தன் உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்