திருத்தந்தை: மறைப்பணி ஆர்வம் அன்பினால் பிறக்கின்றது
மேரி தெரேசா: வத்திக்கான்
திருப்பலி, மற்றும் நற்செய்தியில் வேரூன்றப்பட்ட உடன்பிறந்த உணர்வுகொண்ட நல்லிணக்கத்தில் மறைப்பணியாளர்களாக வாழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Premonstratensians என்ற துறவு சபையினரிடம் கூறியுள்ளார்.
Prémontréல் முதல் துறவு இல்லம் நிறுவப்பட்டதன் 900மாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Premonstratensians (Order of Canons Regular of Prémontré) எனப்படும் அச்சபையின் ஏறத்தாழ 90 உறுப்பினர்களை, செப்டம்பர் 22, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அச்சபையின் வரலாறு குறித்து சிந்தித்து, வருங்காலத்தை முன்னோக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மனித வரலாற்றின் சோதனைகள் மற்றும், வெற்றிகளின் மத்தியில் நம்பிக்கையின் ஒளிரும் கலங்கரை விளக்கங்களாக, தங்கள் திறமைகளால் எங்கும் பரவிய இச்சபையினரைப் பாராட்டி ஊக்கப்படுத்திய திருத்தந்தை, குழு வாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
மறைப்பணி, உறுதியான தன்மை
இச்சபையின் நீண்ட வரலாறு பற்றி அறியும்போது, இச்சபை பரவிய இடங்களில் எல்லாம், ஓரிடத்தில் வாழ்வும், நற்செய்தி அறிவிப்புப் பணியும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்லமுடியும் என்பதை, தனது மறைப்பணி, மற்றும், நிலையான வாழ்வமுறையால் வெளிப்படுத்தியுள்ளது என்றும், இச்சபையின் ஒவ்வொரு துறவு இல்லமும் மகிழ்வான நிகழ்வுகள் மற்றும், சோதனைகளையும் எதிர்கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மறைப்பணி ஆர்வம்
ஆண்டவரின் விருப்பத்திற்குத் திறந்த மனதுள்ள ஒரு மறைப்பணியாளராக, கிறிஸ்துவின் சகோதரர் அல்லது சகோதரியாக வாழ்வது என்பது, திருப்புகழ்மாலை, மற்றும் திருப்பலியை நிறைவேற்றுவதில் வேரூன்றப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, குழு செபம், உடன்பிறந்த உணர்வு நல்லிணக்கக் கலாச்சாரத்தை வழங்குகின்றது என்று தெரிவித்துள்ளார்.
இத்தகைய வாழ்வு, அந்நியர்களை, சகோதரர் சகோதரிகளாக நடத்தும் ஓர் உண்மையான மறைப்பணி விருந்தோம்பலுக்கு இட்டுச்செல்கின்றது என்றும், எந்தவொரு துறவுக் குழுமத்தின் பொருளாதார நடவடிக்கையும், மறைப்பணிக்கும், அக்குழுவின் தனிவரத்திற்கு உண்மை உருகொடுப்பதற்கும் பயன்படுவதாய் இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
1120ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டின் Laonவுக்கு அருகில் Prémontréல் புனித நார்பெர்ட் என்பவரால் தொடங்கப்பட்ட இச்சபை, விரைவில் ஐரோப்பா எங்கும் பரவியது. புனித அகுஸ்தீனாரின் ஆழ்நிலை துறவு வாழ்வு சட்டங்களைப் பின்பற்றிய Premonstratensians அல்லது நார்பெர்ட்டைன் என்ற இச்சபையினர், சிஸ்டர்சியன் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்ட ஒரு துறவு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்