திருத்தந்தை: உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள், மற்றும், ஏழைகளோடு அருகாமையைத் தெரிவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் புதிதாக ஆயர்களாகத் திருப்பொழிவுபெற்ற ஏறத்தாழ 200 ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆயர்கள் பேராயம் மற்றும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தால் நடத்தப்பட்ட பணிப்பயிற்சியில் பங்குபெற்ற ஏறக்குறைய 200 புதிய ஆயர்களை, செப்டம்பர் 19, இத்திங்களன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
உரோம் நகரின் Regina Apostolorum நிறுவனத்தில் பயிற்சிபெற்ற இப்புதிய ஆயர்களோடு கலந்துரையாடிய திருத்தந்தை, அவர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்கள், முன்வைத்த பரிந்துரைகள் மற்றும், பிரச்சனைகளைக் கேட்டறிந்ததோடு, ஏழைகளுக்குப் பணிபுரியுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆயர்களாக இருப்பது எப்படி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்த தன் எண்ணங்களை அப்புதிய ஆயர்களுக்குத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய ஆயர்களுக்கு உரோம் நகரில் பயிற்சி நடத்தப்படவில்லை. அதனால் புதிய ஆயர்களுக்கு, இவ்வாண்டில் இரு குழுக்காளாகப் பயிற்சி வழங்கப்பட்டது.
இம்மாதத்தின் முதல் எட்டு நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ஆயர்கள் பங்குபெற்றனர். இம்மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சியில் ஏறக்குறைய 200 புதிய ஆயர்கள் பங்குபெற்றனர்.
முதல் குழுவினரையும், அப்பயிற்சியின் இறுதியில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாவது குழுவில் பங்குபெற்ற புதிய ஆயர்களை, இத்திங்களன்று சந்தித்து அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தினார்.
"பெருந்தொற்றுக்குப்பின் மாறிவரும் உலகில் நற்செய்தி அறிவித்தல்: ஆயரின் பணி" என்ற தலைப்பில் இவ்வாண்டில் புதிய ஆயர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த இரண்டாவது குழுவில், இலத்தீன் அமெரிக்காவில் புதிதாக நியமனம் பெற்ற ஆயர்கள் பெருமளவில் பங்குபெற்றனர். திருத்தந்தையோடு நடைபெற்ற சந்திப்பு குறித்து பிரேசிலின் São Paulo துணை ஆயர் Angelo Ademir Mezzari அவர்கள், வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்டபோது, ஏழைகளை மறக்கவேண்டாம் என, திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்று கூறியுள்ளார்.
இப்பூமிக்கோளத்தின் பராமரிப்பு, திருஅவையில் இடம்பெற்றுவரும் ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கை, திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள், திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் உட்பட பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை தன் எண்ணங்களை எடுத்துரைத்தார் என மேலும் சில ஆயர்கள் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்