தேடுதல்

இஸ்பெயின் காரித்தாஸ் பிரதிநிதிகளோடு திருத்தந்தை பிரான்சிஸ்  இஸ்பெயின் காரித்தாஸ் பிரதிநிதிகளோடு திருத்தந்தை பிரான்சிஸ்  

இஸ்பெயின் காரித்தாசிடம் திருத்தந்தை:அன்பே, முக்கிய மனிதப்பண்பு

காரித்தாஸ் என்ற பெயர், கடவுளின் எல்லையற்ற அன்பால் அவர் சாயலிலுள்ள படைப்புகளாகிய நாம் அனைவரும் கொண்டிருக்கவேண்டிய மிக முக்கிய மனிதப் பண்பை நினைவுக்குக்கொணர்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

காரித்தாஸ் என்ற பெயர், கடவுளின் எல்லையற்ற அன்பால் அவர் சாயலிலுள்ள படைப்புகளாகிய நாம் அனைவரும் கொண்டிருக்கவேண்டிய மிக முக்கிய மனிதப் பண்பை நினைவுக்குக்கொணர்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பினரிடம் கூறியுள்ளார்.

இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவ்வமைப்பின் 32 பிரதிநிதிகளை, செப்டம்பர் 05, இத்திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறியுள்ளார்.

நம்பிக்கைகள், மற்றும், கருத்தியல்கள் ஆகியவற்றையும் கடந்து இவ்வமைப்பு, மனிதரின் மிக முக்கிய பண்பாகிய அன்பை வெளிப்படுத்தி வருகிறது மற்றும், இஸ்பெயின் சமுதாயத்தின் நன்மதிப்பையும் சம்பாதித்துள்ளது என்று பாராட்டிய திருத்தந்தை, அவ்வமைப்பின் 75 வருட சேவைக்குத் தன் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

கடவுளோடும் பிறரோடும் ஒன்றிப்பு

காரித்தாஸ் அமைப்பு, தனது பணியை முன்னோக்கி ஆற்றுவதற்கு இறையன்பே வழிகாட்டுகிறது என்றும், கடவுளோடும், நம் சகோதரர் சகோதரிகளோடும் ஒன்றிப்புடன் வாழ்வதற்கு கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பை, தனிமனிதரிலும், சமுதாயத்திலும் செயல்படுத்த இந்த அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இஸ்பெயின் காரித்தாஸ் பிரதிநிதிகள்
இஸ்பெயின் காரித்தாஸ் பிரதிநிதிகள்

இந்த ஒன்றிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளில் எதிர்கொள்ளப்படும் சவால்களையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, பணியாற்றுகின்றவர்களின் திறமைகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும், அதேநேரம், பலன்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

உதவிகள் பெறுவோரை அன்போடு வரவேற்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர்கள் வாழ்வில் முன்னேறவேண்டிய வழிகளையும் எடுத்துரைக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நீதி, அன்பு, மற்றும், அமைதியின் இறையாட்சியின் புளிக்காரமாக வாழ ஆண்டவர் அழைப்புவிடுப்பதையும், உண்மையிலேயே பெரியவராய் இருக்க விரும்புவர் பணியாளாய் இருக்கட்டும் என்று அவர் நமக்குப் போதிப்பதையும் நினைவுபடுத்தினார்.

நல்ல சமாரியர்களாக இருங்கள் என்று இஸ்பெயின் காரித்தாஸ் அமைப்பினரிடம் கூறியதோடு, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2022, 15:06