தேடுதல்

"கொடையாக வாழுங்கள்"  இத்தாலியின் மிலான் மறைப்பணி விழா. "கொடையாக வாழுங்கள்" இத்தாலியின் மிலான் மறைப்பணி விழா.  

"கிறிஸ்தவர்கள் அமைதியின் சாட்சிகள்"- திருத்தந்தை

மகிழ்ச்சி, செபம், செவிமடுத்தல், கலந்துரையாடல் போன்றவைகள் மறைப்பணி, நம்பிக்கையின் இணைப்பு மட்டுமல்ல, திருஅவை வாழ்வின் இதயம் என்பதையும் எடுத்துரைக்கின்றது. - திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் அமைதியின் சாட்சிகளாக, மறைப்பணி ஆர்வத்தை வளர்த்தெடுப்பவர்களாக, மொத்தத்தில் மறைப்பணியை திருஅவை வாழ்வின் இதயமாகக் கருதுபவர்களாக வாழ வேண்டும் என்று மிலானில் நடைபெறும் மறைப்பணி விழாவிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை இத்தாலியின் மிலான் நகரில் கொடையாக வாழுங்கள் என்னும் தலைப்பில் நடைபெறும் மறைப்பணி விழாவைப் பாராட்டி அதில் பங்குபெறும் அனைவரையும் வாழ்த்தி அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

கால மாற்றத்தின் சூழலில், மறைப்பணி வழியாக மக்களுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவும், கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கின்றார், நம்மை அன்பு செய்கின்றார் என்பதை இன்றைய மக்களுக்கு அறிவிப்பதும் மறைப்பணியின் முக்கிய கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இவ்விழாநாட்களில் காணப்படும் மகிழ்ச்சி, செபம், செவிமடுத்தல், கலந்துரையாடல் போன்றவைகள் மறைப்பணி நம்பிக்கையின் இணைப்பு மட்டுமல்ல, திருஅவை வாழ்வின் இதயம் என்பதையும் எடுத்துரைக்கின்றது எனவும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் ஒரு பணிக்காகவே அனுப்பப்பட்டிருக்கின்றோம், எனவே அப்பணியை அறிவூட்டல், ஆசீர்வதித்தல், மேம்படுத்துதல், குணப்படுத்துதல், விடுதலை அளித்தல் போன்றவற்றின் வழியாக சிறப்பாக செய்து முத்திரை பதித்து வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

போர், மோதல், சவால்கள் நிறைந்த இவ்வுலகில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக, என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்" என்று இயேசு தந்த அமைதியை தனிநபராக, குழுவாக கடைபிடித்து, செயல்கள் வழியாக அவற்றை நம் மனதில் ஆழமாகப் பதித்து வாழ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உண்மை, நீதி, கருணை என்பவற்றின் அடிப்படையில் ஒன்றிணைந்து உயிர்ப்பின் பரிசாம்  உண்மை அமைதியை பெற அழைக்கப்ப்டுகின்றோம் எனவும்  எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2022, 14:41