அமைதியைக் கட்டி எழுப்புங்கள்! : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மறைசாட்சியின் நிலமாக மாறியுள்ள உக்ரைனை நான் மறக்கவில்லை என்று விசுவாசிகளிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 7, இப்புதனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் காலத்தில் நடக்கும் அனைத்துவிதமான போர் நிறைந்த சூழ்நிலைகளிலும் அமைதியைக் கட்டி எழுப்புபவர்களாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் நல்லிணக்கம் மற்றும் ஒப்புரவிற்கான எண்ணங்களும் திட்டங்களும் பரவ வேண்டும் என இறைவேண்டல் செய்யுமாறும் ஊக்கமூட்டினார்.
இன்று நாம் ஒரு உலகப் போரை எதிர்கொண்டு வருவதால், தயவுகூர்ந்து அதனை நிறுத்துவோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்பட்ட்டுள்ளவர்களை, குறிப்பாக, உக்ரைனின் அன்பான மக்களை, புனித கன்னி மரியாவிடம் அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து அன்னையர்களுக்காகவும் இறைவேண்டல்
மேலும், செப்டம்பர் 8, வியாழனன்று, அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவதற்குத் திருஅவை தயாராகி வரும் நிலையில் அனைத்து அன்னையர்களுடன், குறிப்பாக, நோய்வாய்ப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அல்லது சிறையில் இருக்கும் குழந்தைகளைக் கொண்ட அன்னையர்களுடன் செபம் நிறைந்த தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளம் கைதிகளின் அன்னையர்களுக்காகவும், அவர்களின் நம்பிக்கை மடிந்துபோகாதபடியும் அவர்களுக்காக சிறப்பாகச் இறைவேண்டல் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்பாராதவிதமாக, , சிறையில் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், சில சமயங்களில் அவர்களில் இளம் கைதிகள் கூட உள்ளனர்," என்றும், சில நேரங்களில், ஒரு தாயின் அன்பு ஒருவரை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் உள்ளதாகவும், பயம், குற்ற உணர்வு, உறவுகளை இழந்த நிலை ஆகிய காரணங்களினால் தனிமைச் சிறைகளில்தான் அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், 2018-ஆம் ஆண்டு மட்டும் 92 சிறைச்சாலைகளில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்