உக்ரைனில், உலகில், அமைதி நிலவ திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
செப்டம்பர் 04, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக அறிவித்த திருப்பலியின் இறுதியில் அதில் பங்குபெற்ற அரசுகளின் பிரதிநிதிகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அன்னை மரியாவிடம் உலக அமைதிக்காகச் செபித்தார்.
வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் பங்குபெறுவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தன் சகோதரர் கர்தினால்கள், ஆயர்கள், மற்றும், அருள்பணியாளர்களுக்கும், இப்புதிய அருளாளர் பிறந்து வளர்ந்து பணியாற்றிய பெல்லூனோ, வெனிஸ், வித்தோரியோ-வெனெத்தோ ஆகிய பகுதி மக்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
இப்புதிய அருளாளருக்கு தங்களின் மரியாதையைத் தெரிவிப்பதற்காக இத்திருப்பலியில் பங்குகொண்ட அரசுப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, குறிப்பாக இத்தாலிய அரசுத்தலைவரையும், Monaco பிரதமரையும் மதிப்புடன்கூடிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
இறுதியில் மூவேளை செபத்தைச் செபிப்பதற்குமுன், உலகமனைத்திற்கும், குறிப்பாக, போரினால் சிதைந்துபோயுள்ள உக்ரைனுக்கும், அன்னை மரியா அமைதி என்னும் கொடையை அருளுமாறு செபிப்போம் எனக் கூறிய திருத்தந்தை, ஆண்டவரின் முதன்மையான மற்றும், நிறைவான சீடராகிய அன்னை மரியா, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் முன்மாதிரிகை, மற்றும், தூய வாழ்வைப் பின்பற்ற நமக்கு உதவுவாராக என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்