மொசாம்பிக்கில் கொல்லப்பட்ட மறைப்பணியாளருக்காக செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மொசாம்பிக் நாட்டில் கொல்லப்பட்ட, இத்தாலிய மறைபோதகரான அருள்சகோதரி மரியா தெ கோப்பி (Maria De Coppi) அவர்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சகோதரியின் சான்று வாழ்வு, கிறிஸ்தவர்களுக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும் வலிமையையும் துணிவையும் அளிக்கவேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் கொலைசெய்யப்பட்ட கொம்போனி மறைபோதக சபையின் அருள்சகோதரி மரியா தெ கோப்பி அவர்கள், அந்நாட்டில் ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் அன்போடு மறைப்பணியாற்றி வந்துள்ளார் என்றும், அவரை, தன் செபத்திலும் எண்ணத்திலும் நினைவுகூர்வதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
செப்டம்பர் 6, கடந்த செவ்வாயன்று மொசாம்பிக் நாட்டின் Chipene என்னுமிடத்தில் இத்தாலியரான அருள்சகோதரி Maria De Coppi அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்
எத்தியோப்பியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
மேலும், இஞ்ஞாயிறன்று தங்களின் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடிய எத்தியோப்பியர்களுக்கு திருத்தந்தை, அந்நாட்டிற்கு கடவுள், அமைதி மற்றும், ஒப்புரவின் கொடையை நல்குமாறு மன்றாடியுள்ளார்.
எத்தியோப்பியர்களின் தனிச்சிறப்புமிக்க நாள்காட்டியின்படி, அம்மக்கள் இஞ்ஞாயிறன்று தங்களின் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடினர்.
கர்தினால் Konrad Krajewski
இன்னும், உக்ரைன் நாட்டில் பல்வேறு சமூகங்களைப் பார்வையிட்டு, அவைகளோடு தானும், திருஅவையும் கொண்டிருக்கும் நெருக்கத்தை தெளிவான சான்றால் வெளிப்படுத்த அந்நாட்டில் திருப்பீட பிறரன்புப் பணித் துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski அவர்கள் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்