விளையாட்டு, எல்லாரையும் வரவேற்கும் இடமாக அமைவதாக
மேரி தெரேசா: வத்திக்கான்
விளையாட்டு அனைவருக்கும் உரியது, இது அனைவரையும் ஒருங்கிணைப்பது, மற்றும், எல்லாருக்கும் தகுதியானது என்ற கருத்தியலை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத்தில் வத்திக்கானில் நடைபெற்ற விளையாட்டு குறித்த பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்டோரைப் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“அனைவருக்கும் விளையாட்டு” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் பங்குபெற்ற நாற்பது நாடுகளின் பல்வேறு மதங்களைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள், மற்றும், அதிகாரிகளை, செப்டம்பர் 30, இவ்வெள்ளி மாலையில் வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைவருக்கும் உரிய இல்லமாகவும், திறந்தமனதோடு அனைவரையும் வரவேற்பதாகவும் விளையாட்டை அமைக்குமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, இம்மாநாட்டின்போது கையெழுத்திப்பட்ட விளையாட்டு குறித்த இறுதி அறிக்கையை, இதில் கலந்துகொண்டோர் சார்பாக ஒரு பிரதிநிதியிடம் கொடுத்தார்.
இம்மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பொதுவான அறிக்கையில், இதில் கலந்துகொண்டோர் எட்டவேண்டிய இலக்குகள், அவர்கள் முன்னெடுத்துச் செய்யவேண்டிய பணிகள் மற்றும், பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இம்மிகப்பெரும் இலக்குகளை எட்டுவதற்கு, ஒன்றிப்பு உணர்வில், ஒரு குழுவாக விளையாடவேண்டும், மற்றும், ஒன்றுசேர்ந்து பணியாற்றவேண்டிய தேவை உள்ளது என்றும், திருஅவையும் அதற்கான சூழல்களையும், செயல்பாடுகளையும் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
விளையாட்டு, மக்கள் சந்திக்கின்ற, மற்றும், அவர்கள் புண்ணியத்திலும், உடன்பிறந்த உணர்விலும் வளர பயிற்சியளிக்கும் இடமாக மாறுவதற்குரிய சூழல்களை, கத்தோலிக்கப் பள்ளிகள், பங்குத்தளங்கள், மற்றும் இளையோர் மையங்கள் அமைத்துக்கொடுக்கும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
சமுதாயத்திற்கு ஒற்றுமையின் அடையாளமாக, ஒருங்கிணைப்பின் அனுபவமாக, நல்லிணக்கம் மற்றும், அமைதியின் செய்தியாக, விளையாட்டு இருக்க முடியும் என்றும், விளையாட்டு உலகம், ஒன்றிப்பு மற்றும், ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினால், அமைதியைக் கட்டியெழுப்புவதில் வல்லமைமிக்க நண்பராக மாறும் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
விளையாட்டுகளில் மனிதரை மையமாக வைத்தலே முக்கியம் எனவும், பங்கேற்பு, பகிர்வு, சார்புநிலை, குழுமம் போன்ற உணர்வுகளை விளையாட்டு பிறப்பித்தால், அது மகிழ்வையும், சமூக உணர்வையும் வழங்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையும், கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பீட அவையும் இணைந்து, செப்டம்பர் 29 இவ்வியாழன், 30 இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில் இம்மாநாட்டை நடத்தின.
புலம்பெயர்ந்தோர், முன்னாள் கைதிகள், உடலிலும், அறிவிலும் வளர்ச்சி குன்றியவர்கள், என பல்வேறு நிலையிலுள்ளோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு, தனிமனிதப் பண்பை வளர்த்தல், முதிர்ச்சி, மக்களை ஒன்றிணைத்தல், அமைதியைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்