தேடுதல்

கிறிஸ்துவின் வாரிசுகளாக வாக்குறுதிகளாக வாழுங்கள்

செப்டம்பர் 15 இவ்வியாழன் காலையில், திருத்தந்தை அவர்கள், நூர்-சுல்தான் புனித சகாய அன்னைப் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், வேதியர்கள், இருபால் துறவியர், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றினார்.

மெரினா ராஜ்- வத்திக்கான்

வெவ்வேறு ஊர், இடம், நாட்டிலிருந்து வந்திருந்தாலும், நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்பதில் திருஅவையின் அழகு வெளிப்படுகின்றது. நாம் அந்நியரல்ல, ஒரே குடும்பத்தைச் சார்ந்த திருஅவையினர். பலுகிப்பெருகிய வளமான கடவுளின் தூய மக்கள். நாம் யார் நம்மிடம் என்ன உள்ளது என்பதை ஒருவர் மற்றவரிடம் பகிர்ந்து பன்முகத்தன்மையின் வளமையை அடைவதன் வழியாக நமது பலத்தை வெளிப்படுத்துகின்றோம். நாம் செய்யும் செயல்கள் சிறியதாக இருந்தாலும், அது பகிரப்படும்போது பெரியதாகின்றது.  கிறிஸ்து, மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார்மேல் அதிகாரம் பெற்றுள்ளார். துணிவையும் எதிர்நோக்கோடு கூடிய பெருமையையும் நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்.(எபி. 3-6) துணிவையும் எதிர் நோக்கையும் உறுதியாகப்பெற்று கிறிஸ்துவின் வழித்தோன்றல்களாக செயல்படும் நாம், அவரது வாக்குறுதிகளாகவும் செயல்பட அழைக்கப்படுகின்றோம்.

இறைத்திருவுளம் என்பது அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மற்றும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, அது கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுலின் இரண்டு வார்த்தைகளான குடும்பத்தார், வாக்குறுதி ஆகிய இரண்டையும் திருஅவைத் தன்  கைகளில் பெற்றுச் செயல்படுகின்றது. ஒவ்வொரு தலத்திருஅவையும்  நற்செய்தி அறிவிப்பின் தொடக்கமாக, திருத்தூதர்கள் மற்றும்  நற்செய்தி அறிவிப்பாளர்கள் உருவான காலமாகத் திகழும் கடந்த கால வரலாற்றை ஒரு கையிலும், கடவுளின் வாக்குறுதி கிறிஸ்துவில் நிறைவேறியது என்பதை கண்டவர்கள், எதிர்கால நிறைவை நம்பிக்கை வாழ்வில் பெறும் உயிர்ப்பின் மக்கள் போன்றோரை மறு கையிலும் பெற்றுள்ளது. இத்தகைய வாக்குறுதி மற்றும் நம்பிக்கை பயணத்தின் எதிர்பார்ப்பு நினைவுகளோடுப் பயணிக்கும் நாம், கடந்த கால வரலாற்றை நினைவாகவும், நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் நம்மைச் சந்திக்க வரும் இறைவனை  எதிர்காலமாகவும் கொண்டு செயல்பட அழைக்கப்படுகின்றோம். இந்த நினைவிற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலேயே  திருஅவையும் பயணிக்கின்றது.

மேய்ப்புப் பணி செய்வோரை சந்தித்த திருத்தந்தை
மேய்ப்புப் பணி செய்வோரை சந்தித்த திருத்தந்தை

கடந்த காலத்தின்  வளமையான நினைவுகள்

மத்திய ஆசியாவில் முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள், துறவற குழுக்கள், பேராலயங்கள் அடைபட்ட மடங்கள், வழிபட்டுத் தலங்கள் நிறுவுதல் போன்றவற்றை ஏற்படுத்தினர். கிறிஸ்தவத்தின் வளமையை பாதுகாத்து மரியாதை செய்யப்படவேண்டிய தன்மையை நமக்கு விட்டுச்சென்ற நம் பெற்றோர் வயதில் மூத்தோர் மற்றும் பொது மக்களுக்கு நமது நன்றியையும் மரியாதையும் செலுத்தவேண்டும். நமது இந்த ஆன்மீக மற்றும் திருஅவை பயணத்தில் நம் மனதில் நம்பிக்கையை உருவாக்கிய அனைவரையும் நாம் நினைவுகூரவேண்டும். இதனால் தொடக்க கால வரலாற்றில் செயல்பட்ட கடவுளின் ஆற்றலை இன்னும் அதிகமாக உணர்வதோடு  நமது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வின் பிரச்சனைகள் துன்பங்களில், இறைவன் எவ்வாறு செயலாற்றியுள்ளார் என்பதையும்  நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது நாம் கவனமாகச் செயல்படுதல் வேண்டும் ஏனெனில் நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத் தூண்டப்படலாம் . திரும்பிப்பார்த்தல் என்பது திரும்பி அவ்வாழ்க்கைக்குச் செல்லுதலோ, அல்லது அன்று அனுபவித்த துன்பத்தில் மீண்டும் சிக்கிகொள்ளுதலோ அல்ல. கடவுளின் ஆற்றல் அபரிமிதமாகச் செயல்பட்டதை நினைத்து நன்றிகூற, போற்ற நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் இந்த நன்றி நிறை மனநிலையுடன்  வாழ நற்செய்தியை அறிவிக்க விரைவாக முன் சென்ற எம்மாவு சீடர்கள் மற்றும் உயிர்ப்பு நிகழ்வில் பங்கு கொண்ட பெண்கள் போல செயல்படவேண்டும்.

இயேசுவின் திரு நற்கருணை பிரசன்னம் இந்த நினைவுகளைப் கருவூலமாகக் கொண்டிருக்க நமக்கு உதவுகின்றன். நினைவுகளின்றி வியப்புக்கள் இல்லை. வாழும் நினைவான நற்கருணையின்றி நமது நம்பிக்கைகள் வழிபாடுகள் மறைப்பணிகள் என நாம் செய்யும் அத்தனையும் ஒளிவீசாது. தொடக்கத்தில் பிரகாசமாக எரிவது போல தோன்றினாலும் பின்னர் அதன் ஒளி மறைந்து மங்கலாகிவிடும். நற்கருணையின் நினைவு நம்மிடமிருந்து மறைந்தால் நமது மகிழ்ச்சியும் மறைந்துவிடும். கடவுள் மற்றும் நமது சகோதர சகோதரிகளிடத்தில் நாம் நன்றி உணர்வு கொண்டவர்களாக வாழும் போது, கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்ற இந்த அழைத்தலை உயர்வாகக் கருதுவோம். அன்றாட நிகழ்வில் கிறிஸ்துவைச் சந்தித்து  அவரது அரவணைப்பைப் பெற்று, சான்றுள்ள நம்பிக்கை வாழ்வு வாழ்பவர்களாகக் கிறிஸ்துவை அருளடையாளமாக அறிவிப்பவர்களாக, கிறிஸ்து தான் அருளடையாளம் என்பதை எடுத்துரைப்பவர்களாக வாழ்வோம்.

திருத்தந்தையின் உரைக்கு செவிமடுக்கும் துறவிகள்
திருத்தந்தையின் உரைக்கு செவிமடுக்கும் துறவிகள்

வாக்குறுதியை நிறைவேற்றும் எதிர்கால மக்களாக  

நற்செய்தியின் வாக்குறுதிகளை வெளிப்படுத்துவதாக இருக்கும் கடந்த காலம்  இயேசு கிறிஸ்து எப்போது நம்முடன் இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.  நம்முடைய பலவீனங்களில், பிரச்சனைகளில், நம்மோடு உடனிருந்து அவற்றிலிருந்து மீண்டுவர, திருஅவையோடு ஒன்றிணைய, ஒரே குடும்பமாகக் கட்டியெழுப்பப்பட, சோர்வடையாது நம்மோடு இருந்து நமக்கு உதவுகிறார். நாம் செய்கின்ற செயல்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதற்கான பலன் நமக்குக் கட்டாயம் கிடைக்கும். ‘எளிய மனத்தோர் பேறுபெற்றோர்’ என்று இயேசு இதைத்தான் கூறுகின்றார். ஒவ்வொரு சிறிய செயல்களுக்குப் பின்னும் கடவுளின் எல்லையற்ற ஆற்றல் அருள் நிறைந்துள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம். கடுகுவிதை சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து வானத்துப் பறவைகள் தங்கும் மிகப்பெரிய மரமாக மாறுவது போல, கடவுளின் ஆற்றலாலும், அருளாலும், நமது செயலும், நிறைவெற்றி அடையக் கூடும். சிறிய செயல்களில் தன்னிறைவு அடையாது, கடவுளும் கிறிஸ்தவ நம்பிக்கையை தங்களின் வாழ்வாலும் செயலாலும் எடுத்துரைத்த ஒவ்வொரு கிறிஸ்தவரும் தேவை என்பதை உணர்ந்து செயல்படுவோம். கலந்துரையாடல், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளல், ஒன்றிணைந்து செயல்படுதல் போன்றவை அவற்றிற்கான பலனைத்தரும்.

செல்வத்தில் ஒன்றுமில்லை ஏழ்மையில்தான் எல்லாமிருக்கின்றது என்பதைப் புரிந்து எளிய செயல்கள், உடன்பிறந்த உணர்வு,  துன்புறும் மக்கள் நலனில் அக்கறை, நேர்மை, உண்மையின் சான்றான வாழ்வு, சமூக உறவு போன்றவைகள் கொண்ட நேர்மையின் பள்ளிகளாக ஒவ்வொரு கிறிஸ்தவக் குழுவும் திகழ வேண்டும். நாம் அனைவரும் கிறிஸ்துவின் சீடர்கள், தனித்துவமானவர்கள், சமமான மாண்புடையவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்துவின் வாழ்வில் நம்மைப் புகுத்தி, கிறிஸ்துவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக, அவரது நற்செய்தி வாக்குறுதியை நிறைவேற்றும் மக்களாக வாழ்வோம். தனது வாழ்க்கையை உடல் நலமற்றவர்களைக் கவனிப்பதற்காகப் பயன்படுத்திய அருளாளர் bukowinski அவர்களின் நினைவகத்தில் எப்போதும் காணப்படும் புது மலர்களும் ஒளி விளக்குகளும் கடவுளின் மக்கள் புனிதத்தை விரும்புகின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றது. ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் நான் கூறுவது, ‘நம்முடைய பணி துறவற நிறுவனங்களையும் கொள்கைகளையும் ஆளுகை செய்வதல்ல, மாறாக, கிறிஸ்துவின் திருஇதய இரக்கத்தில் வாழும் அடையாளங்களாக, மக்களை நெருங்கிச் செல்வது.

கடவுளின் அன்பை இவ்வுலகிற்குக் கொண்டு வந்த அவரின் வாரிசுகளாக, புனிதமிகு புது மலர்ச்சியின் வாக்குறுதிகளாகச் செயல்பட உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். தூய இதய அன்னை, பனியை மறையச் செய்து ஏரியை மீன்களால் நிறைத்து, அருளடையாளத்தை நிகழ்த்தி, மக்களைத் தாயன்போடு காத்தது போல, நம்முடைய இதயங்களையும்  உருகச்செய்து, சகோதர அன்பு என்னும் நெருப்பூட்டி, நற்செய்தி அறிவிப்பில் புது நம்பிக்கையை தர அருள் வேண்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றி கூறி, ஆசீரை வழங்குகின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 14:41