தேடுதல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள்  

அருளாளராக உயர்த்தப்படவுள்ள திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல், அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வரை 33 நாள்களே கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஆற்றியவர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை 33 நாள்களே ஆற்றிய இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 04, இஞ்ஞாயிறன்று அருளாளராக அறிவிப்பார்.

இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இஞ்ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படுவார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படும் இந்நிகழ்வையொட்டி, இந்நவீன காலத்தில், எதிர்பாராமல் இடம்பெற்ற இத்திருத்தந்தையின் இறப்பு குறித்து நிலவும் பல சந்தேகங்களை அகற்றவும், அவர் விட்டுச்சென்ற மரபுரிமை குறித்து அறிவிக்கவும் திருஅவையின் பல்வேறு முக்கிய நபர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.       

Albino Luciani என்ற இயற்பெயரைக்கொண்ட இத்தாலியரான திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பற்றி கூடுதலாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கென்று, அவரது போதனைகள், ஆழமான ஆன்மிகம், இறையியல் கருத்துக்கள் போன்றவை குறித்து, கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, செப்டம்பர் 02, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

இன்றைய உலகிற்கு இத்திருத்தந்தையின் செய்தி மிகவும் முக்கியம் என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் கூறிய இக்கூட்டத்தில், இத்திருத்தந்தையின்  மருமகளான Lina Petri அவர்களும், இத்திருத்தந்தையின் இறந்த உடலை முதன் முதலில் பார்த்த குழந்தை மரியா சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Margherita Marin அவர்களும், இத்திருத்தந்தை குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

யூதர்களுக்கு உதவியவர்

இரண்டாம் உலகப் போரின்போது துன்பற்ற யூதர்களுக்கு உதவியது, தனது மாமாவிடமிருந்து வந்த கடிதங்கள், அவர் கூறிய அறிவுரைகள், புனிதர்கள் அகுஸ்தின், தோமையார் ஆகியோர் குறித்து உரையாடியது போன்றவை பற்றி இத்திருத்தந்தையின் மருமகளான Lina Petri அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

பெல்லூனோவில் ஹிட்லருக்கும், முசோலினிக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றி குறித்து, எங்கள் மாமா எங்களிடம் கூறியபோது, நாம் இரு பைத்தியக்கார மனிதர்களின் கரங்களில் இருக்கிறோம் என்று கூறியதாகவும் லீனா அவர்கள் தெரிவித்தார்.   

அருள்சகோதரி Margherita Marin
அருள்சகோதரி Margherita Marin

அருள்சகோதரி Margherita Marin

வத்திக்கானில் பாப்பிறை தங்கியிருந்த அறையில் உதவியாளராகப் பணியாற்றிய அருள்சகோதரி Margherita Marin அவர்கள் இத்திருத்தந்தை பற்றி இக்கூட்டத்தில் தெரிவித்தபோது, 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, நானும், அருள்சகோதரி Vincenza Taffarel  அவர்களும், இத்திருத்தந்தையின் இறந்த உடலை முதன் முதலில் பார்த்தோம் என்றார்.

இறப்பு குறித்த மருத்துவ அறிக்கைகள்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு உதவி வேண்டுகையாளராகப் பணியாற்றிய Stefania Falasca அவர்கள் பேசுகையில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் வத்திக்கான் அமைப்பு சேகரித்த ஆவணங்கள், இத்திருத்தந்தையின் வாழ்க்கை வரலாறு குறித்து சரியாக அலச முடிந்தது என்று கூறியுள்ளார்.

இத்திருத்தந்தை குறித்து நடைபெற்ற அறிவியல் ஆய்வுகள், நஞ்சு கொடுக்கப்பட்டதால் இவர் இறந்தார் என நீண்ட காலமாகப் பரவிவந்த போலிச் செய்திகளுக்கு ஒரு முடிவைத் தந்துள்ளன என்று கூறிய Falasca அவர்கள், இத்திருத்தந்தையின் இறப்பு குறித்து, குறிப்பாக, இவரது இறப்புக்குரிய காரணம் குறித்து அறிவிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் பற்றியும் விளக்கினார்.

இத்திருத்தந்தையின் உடல் ஏன் பரிசோதனை செய்யப்படவில்லை என சிலர்  கேட்கின்றனர், 1983ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் இது தொடர்பான சட்டம் ஒன்றைக் கொண்டுவரும்வரை, அவ்வாறு செய்வதற்கு சட்டம் ஏதும் இல்லை எனவும் Falasca அவர்கள் கூறியுள்ளார்.

ஒரு சிறுமி குணம் பெறுவதற்காக இத்திருத்தந்தையிடம் செபித்த அர்ஜென்டீனா நாட்டு அருள்பணியாளர் Juan José Dabusti அவர்களும் இச்செய்தியாளர் கூட்டத்தில் அச்சிறுமி குணமடைந்தது குறித்து எடுத்துரைத்தார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 1912ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வட இத்தாலியின் Forno di Canale (தற்போது Canale d'Agordo) என்ற ஊரில் பிறந்தவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2022, 15:27