தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை: கஜகஸ்தான், சந்திப்பின் நாடு

உக்ரைனில் போர் இடம்பெறும் காலக்கட்டத்தில், அமைதியின் திருப்பயணியாக கஜகஸ்தானுக்கு, திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, நூர்-சுல்தானில் நடைபெற்ற பல்சமய மாநாட்டின் தீர்மானங்கள், நல்லதொரு விளைவைக் கொணரவேண்டும் என்று செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் அமைதியின் கருத்தியல்களை வலுப்படுத்தும் நோக்கத்தில், 1981ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை உலக அமைதி நாளை உருவாக்கி அந்நாள் செப்டம்பர் 21ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் அறிவித்தது. பின்னர், 2001ஆம் ஆண்டில் அதே நாளை, 24 மணி நேர, வன்முறையற்ற மற்றும் போர் நிறுத்த நாள் எனவும் அப்பொது அவை அறிவித்தது. “இனவெறிக்கு முடிவுகட்டுங்கள், அமைதியைக் கட்டியெழுப்புங்கள்” என்ற தலைப்பில் செப்டம்பர் 21, இப்புதனன்று ஐ.நா.வின் உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டவேளை, அமைதிக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் இத்தாலி நேரம் காலை 9.30 மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளிடம், தான் அண்மையில் நிறைவேற்றிய கஜகஸ்தான் திருத்தூதுப் பயணம் பற்றிய தன் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர் (தி.பணி.10,34-36).

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். மத்திய ஆசியாவில் பெரிய நாடாக அமைந்திருக்கும் கஜகஸ்தானில் நடைபெற்ற உலகின் பெரிய மற்றும், பூர்வீக மதங்களின் ஏழாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கடந்த வாரம் செவ்வாய் முதல் வியாழன் வரை, அந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டேன். அங்கு எனக்கு இனிய வரவேற்பளித்த, அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், ஆயர்கள், பொதுநிலை கத்தோலிக்கர் மற்றும், பல தன்னார்வலர்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். நம் உலகில் அமைதி மற்றும், மனித உடன்பிறந்த உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொள்வதே எனது இத்திருத்தூதுப் பயணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. இத்தகைய மாநாட்டை நடத்தும் முயற்சி கடந்த இருபது ஆண்டுகளாக அந்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்நாடு, சந்திப்பு மற்றும், உரையாடலின் ஓர் இடமாக, இவ்வுலகிற்கும் தன்னை அறிமுகப்படுத்தி, அமைதி மற்றும், மனித உடன்பிறந்த உணர்வுநிலையை ஊக்குவிப்பதில் முன்னணி வகுத்து வருகிறது. இவ்வுலக மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை, பல்சமய உரையாடல் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு, மேலும் ஒரு படியை எடுத்துவைப்பதாகவும், 1986ஆம் ஆண்டில் அசிசியில் தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தோடு தொடங்கிய பயணத்தின் தொடர்ச்சியாகவும் உள்ளது. மேலும், இந்தப் பாதை, 2019ஆம் ஆண்டில் அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்த உணர்வுநிலை ஏட்டை உள்ளடக்குவதாகவும் உள்ளது.  இத்தகைய சிறந்த முயற்சிகள் குறித்துப் பேசும்போது பல்வேறு நாடுகளைச் சார்ந்த மறைசாட்சிகள் மற்றும், தம் பிள்ளைகள் மத்தியில் அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் ஏற்படுத்த ஆவல்கொள்ளும் கடவுளுக்கு, தங்களின் தினசரி வாழ்வில் பிரமாணிக்கமுள்ள சான்றுகளாய்த் திகழ்ந்தவர்களின் பின்புலங்களையும் நாம் நினைவில் வைக்கவேண்டும். அதோடு கஜகஸ்தான், சந்திப்பின் நாடாக, தன் அழைப்பில் வளரவும்  ஊக்கப்படுத்துகிறேன். இத்திருத்தூதுப் பயணத்தில் அந்நாட்டுத் தலத்திருஅவையின் உறுப்பினர்களையும் என்னால் சந்திக்க முடிந்தது. இந்நாட்டில் சிறுபான்மையாக,  அதேநேரம் நம்பிக்கையில் திடமாய் இருக்கின்ற கத்தோலிக்க சமுதாயம், தன் புனிதர்களின் முன்மாதிரிகையால், குறிப்பாக, அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஆண்டுகளில் தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குத் திறந்தமனதுள்ளதாய் இருந்ததால் உறுதியடைந்துள்ளது. உண்மையில், திருச்சிலுவை உயர்த்தப்பட்ட பெருவிழாவன்று இக்கத்தோலிக்கருக்கு திருப்பலி நிறைவேற்றியது பொருத்தமாக இருந்தது. துன்பம் மற்றும், மரணத்தின் ஒரு கருவியாகிய திருச்சிலுவை, நம்பிக்கை மற்றும், மீட்பின் இறுதி அடையாளமாக மாறியது. கஜகஸ்தான் மக்களையும், அந்நாட்டில் பயணம் செய்யும் திருஅவையின் வாழ்வையும் கடவுள் அபரிவிதமாய் ஆசிர்வதிக்கவேண்டும் என்று செபிப்போம்.

புதன் மறைக்கல்வியுரை 210922
புதன் மறைக்கல்வியுரை 210922

இவ்வாறு தனது அண்மை கஜகஸ்தான் திருத்தூதுப் பயணம் பற்றி இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவர் மீதும் அவர்களின் குடும்பங்கள் மீதும் ஆண்டவர் இயேசுவின் மகிழ்வும் அமைதியும் நிரம்புமாறு செபித்தார். மேலும், செப்டம்பர் 21, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு நோய் உலக விழிப்புணர்வு நாள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நோயினால் துன்புறுவோர், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபித்தார். உக்ரைனில் போரினால் துன்புறும் மக்களையும், இப்புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். பின்னர் எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2022, 10:15