புனித தாமஸ் அக்குவினாஸ், ஞானமுள்ள, நம்பிக்கையுள்ள சீடர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்பிக்கை மற்றும் காரணகாரியங்கள் அடிப்படையில் கடவுள் பற்றிய உண்மைத் தேடலில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த புனித தாமஸ் அக்குவினாஸ் கற்பித்தவைகளின்படி வாழ்வோம் என்று, தாமஸ் அக்குவினாஸ் உலக மாநாட்டில் கலந்துகொண்டோரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 22, இவ்வியாழனன்று வத்திக்கானில் உள்ள கிளமெந்தினா அறையில், “இன்றைய சூழலில் தாமஸ் பாரம்பரியத்தின் வளங்கள்” என்னும் தலைப்பில் நடத்தப்படும் புனித தாமஸ் அக்குவினாஸின் கொள்கைகளை நெருக்கமாகப் பின்பற்றும் குழுவின் 11வது உலக மாநாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புனித தாமஸ் அக்குவினாஸ் உண்மையின் மீது பேரார்வம் கொண்ட மனிதர், கடவுளின் முகத்தைத் தேடுவதில் தளர்வடையாதவர், கடவுள் யார் என்ற கேள்வியினால் தூண்டப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் கடவுள் பற்றிய உண்மைக்கான தேடுதலில் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எவராலும் சொல்லப்பட்ட எந்த ஓர் உண்மையும் தூய ஆவியிடமிருந்து வருகின்றது என்பதை ஆழமாக நம்பிய இப்புனிதரின் வாழ்வை முன்மாதிரிகையாக ஏற்று பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர் கற்பித்தவற்றை புரிந்துகொள்ளத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
படைப்பாளரின் தாமஸ்
படைப்பை கடவுளின் எல்லையற்ற தாராளமான மனப்பான்மையின் வெளிப்பாடாக, அன்பின் திறவுகோலாக, மற்றும், இறை இரக்கத்தின் கொடையாக பார்த்தவர் புனித தாமஸ் அக்குவினாஸ் என்றும், கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத படைப்புக்கள் அனைத்திலும் கடவுளின் பன்முகத்தன்மையைக் கண்டு வாழ்ந்தவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
படைப்புக்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதுபோல, இப்புனிதரின் கொள்கைகளை, அவர் வாழ்ந்த கலாச்சார சூழல் அறிந்து ஆய்வுசெய்வதில் கவனம் செலுத்துதல், உலகளாவிய கலந்துரையாடல் வழியாக அக்கால கலாச்சாரத்தின் உண்மை நீதி ஆகியவற்றை பகுத்தாய்தல் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் வழியாக இணைந்து, அப்புனிதரின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
1323ஆம் ஆண்டு Avignone என்னும் இடத்தில் புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டை 2023ஆம் ஆண்டில் நிறைவு செய்ய இருக்கும் வேளையில், பழைய, புதிய மற்றும் எப்போதும் பலன்தரக்கூடிய செயல்களைச் செய்வதற்குப் பயப்படவேண்டாம் என்றும், எப்போதும் இப்புனிதரோடு செல்லுங்கள் என்றும் வலியுறுத்தி தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 19 இத்திங்களன்று தொடங்கிய 11வது உலகளாவிய தாமஸ் மாநாடு, செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்