வருங்காலத்தை அமைப்பதில் இளையோர் முக்கிய கதாநாயகர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஓய்வுநேரங்களில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் கடவுளோடு நாம் நெருங்கிய உறவோடு வாழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
இறைவேண்டல் என்ற ஹாஷ்டாக்குடன் இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளோடு நாம் எப்போதும் உறவோடு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
108வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாள்
மேலும், செப்டம்பர் 25, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 108வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளுக்குத் தயாரிப்பாக காணொளிகளை வெளியிட்டுவருகின்ற ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, சப்டம்பர் 20, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள காணொளியில் வருங்காலம் குறித்து திருத்தந்தை பேசுவதையும் பதிவுசெய்துள்ளது.
"வருங்காலம் இன்று தொடங்குகிறது மற்றும், நம்மிலிருந்து தொடங்குகிறது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், இன்று நாம் எடுக்கவேண்டிய தீர்மானங்களுக்கான பொறுப்பை வருங்காலத் தலைமுறையிடம் விட்டுவிட முடியாது எனவும், இந்த புதிய தொடக்கத்தில், வருங்காலத்தை அமைப்பதில் இளையோர் முக்கிய கதாநாயகர்களாக இருக்கவேண்டும் எனவும், திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இங்கும், இப்போதும் உடனடியாக எத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? என்று திருத்தந்தை எழுப்பியுள்ள கேள்விக்கு, தலித்தா கும் அமைப்பில் ஆசியாவில் மனித வர்த்தகத்திற்கெதிராய் செயல்படும் இரு இளையோர் பதில் கூறியுள்ளனர்.
முதலில் பதில் கூறியுள்ள ஓர் இளைஞர், இந்த முறையைப் புரிந்துகொள்வது எளிதல்ல, ஏனெனில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு காலம் ஆகும், ஆயினும் இவ்வாறு செயல்படுவது பலனளிக்கும் என்று கூறியுள்ளார்.
அடுத்துப் பேசியுள்ள ஓர் இளம்பெண், இளையோர் வருங்காலத்தை அமைப்பதற்கு உதவியாக, அவர்களுக்கு கல்வி வழங்கவேண்டும், மற்றும், அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்டவேண்டும் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரோடு வருங்காலத்தை அமைத்தல் என்ற தலைப்பில் இந்த 108வது உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்