திருத்தந்தை, ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
ஐவரி கோஸ்ட் குடியரசின் அரசுத்தலைவர் Alassane Ouattara அவர்கள், செப்டம்பர் 17, இச்சனிக்கிழமை காலை பத்து மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் Ouattara அவர்கள் சந்தித்து உரையாடினார்.
ஐவரி கோஸ்ட் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகளும், கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டிற்கு ஆற்றிவரும் பணிகளும் திருப்திகரமாக உள்ளன என இச்சந்திப்புக்களில் கூறப்பட்டுள்ளன.
மேலும், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் ஒப்புரவு நடவடிக்கைச் சூழலில், நாட்டின் சில சமூக மற்றும், பொருளாதார நிலைகள் பற்றியும், ஐவரி கோஸ்ட் பகுதி, மற்றும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் விவகாரங்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களில், மேற்கு ஆப்ரிக்கா, மற்றும், சாஹேல் பகுதி குறித்தும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
பரிசுப் பொருள்கள்
மேலும், 2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் ஏடு உட்பட தான் வெளியிட்ட பல ஏடுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் Ouattara அவர்களுக்குப் பரிசாக அளித்தார்.
அரசுத்தலைவர் Ouattara அவர்களும், அரசுத்தலைவரின் கடமைகளை எடுத்துரைக்கும் ஓவியம் ஒன்றையும், அரசுத்தலைவரின் பணி பற்றிய நூல் ஒன்றையும், சாக்லேட் இனிப்புக்களையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
சந்திப்புகள்
மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, நெதர்லாந்து திருப்பீடத் தூதர் பேராயர் Paul Tschang In-Nam ஆகியோரும், செப்டம்பர் 17, இச்சனிக்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்