திருத்தந்தை, 150 புதிய ஆயர்கள் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
இம்மாதம் முதல் தேதியிலிருந்து திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் உரோம் நகரில், நடத்தி வருகின்ற பயிற்சியில் பங்குபெறுகின்ற உலகின் ஏறத்தாழ 150 புதிய ஆயர்களை, செப்டம்பர் 08, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் Regina Apostolorum நிறுவனத்தில் “பெருந்தொற்றுக்குப்பின் மாறிவரும் உலகில் நற்செய்தி அறிவிப்புப்பணி: ஆயரின் பணி” என்ற தலைப்பில் நடைபெறும் இப்பயிற்சிக் கருத்தரங்கு குறித்து திருப்பீட செய்தித் தொடர்பகம் இவ்வியாழனன்று விளக்கியுள்ளது.
செப்டம்பர் 08, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்கள் இப்புதிய ஆயர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார் என்றும், அதற்குப்பின்பு புதிய ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர் என்றும் அத்தொடர்பகம் கூறியுள்ளது.
இப்பயிற்சி கருத்தரங்கை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பலி நிறைவேற்றி தொடங்கி வைத்தார் என்றும், இப்புதிய ஆயர்களுக்கு, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி வருகின்றனர் என்றும் அத்தொடர்பகம் கூறியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் புதிய ஆயர்களுக்குப் பயிற்சிகள் வழங்க இயலாமல் இருந்தன என்றும், இவ்வாண்டில் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன எனவும், தற்போது நடைபெற்றுவரும் பயிற்சியில் ஏறத்தாழ 150 ஆயர்கள் பங்கு பெறுகின்றனர் எனவும் திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
அடுத்து, இம்மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் உலகின் ஏறத்தாழ 170 புதிய ஆயர்கள் பங்குபெறுவார்கள் எனவும், முதல் குழுவுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளே இவர்களுக்கும் வழங்கப்படும் எனவும், இவ்விரு குழுக்களிலும் கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் பொறுப்பிலுள்ள புதிய ஆயர்களும் கலந்துகொள்கின்றனர் எனவும் அச்செய்தி தொடர்பகம் கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த திருஅவை என்பதன் அர்த்தம், அத்திருஅவையில் தலைமைத்துவம், பிரச்சனைகளை, குறிப்பாக பாலியல் முறைகேடு தொடர்பான பிரச்சனைகளைக் கையாளும் முறைகள், பெருந்தொற்று உருவாக்கிய எதிர்விளைவுகளுக்குப்பின் சமுதாயத்தில் திருஅவை, மறைமாவட்ட நிர்வாகம், ஊடக உலகில் வாழ்தல், குடும்பம், உடன்பிறந்த உணர்வு, ஒன்றிணைந்த கத்தோலிக்க வாழ்வில் ஆயரின் புனிதத்துவம் போன்ற தலைப்புக்களில், புதிய ஆயர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்