தேடுதல்

அர்ஜென்டீனா நாட்டு துணை அரசுத்தலைவர் கிறிஸ்டீனா கிர்ச்னர் அர்ஜென்டீனா நாட்டு துணை அரசுத்தலைவர் கிறிஸ்டீனா கிர்ச்னர்  

அர்ஜென்டீனா துணை அரசுத்தலைவரோடு திருத்தந்தை தோழமை

2019ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவின் துணை அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற கிறிஸ்டீனா கிர்ச்னர் அவர்கள், 2007லிருந்து 2015ஆம் ஆண்டுவரை அந்நாட்டு அரசுத்தலைவராகவும் பணியாற்றியவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

துப்பாக்கிமுனை தாக்குதலிலிருந்து உயிர்தப்பியுள்ள அர்ஜென்டீனா நாட்டு துணை அரசுத்தலைவர் கிறிஸ்டீனா ஃபெர்னான்டஸ் தெ கிர்ச்னர் (Cristina Fernández de Kirchner) அவர்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டினா அவர்கள், தனது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த மக்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்க கையசைத்து நடந்துவந்தபோது, திடீரென அக்கூட்டத்தில் இருந்த ஒருவர், கிறிஸ்டினா அவர்களின் முகத்தின் மீது குறி வைத்து துப்பாக்கியை அழுத்தினார். அதிலிருந்து குண்டு வெளிப்படாததால் கிறிஸ்டினா அவர்களின் உயிர் தப்பியது.  

இத்தாக்குதலையொட்டி, கிறிஸ்டினா அவர்களோடு தனது அருகாமையைத் தெரிவித்து அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல் குறித்த தகவல் தனக்கு மிகவும் கவலையளிக்கிறது எனவும், துயர்நிறைந்த இந்நேரத்தில் அவர்களோடு தன் உடனிருப்பைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அன்புக்குரிய அர்ஜென்டீனாவில் வன்முறை, பகைமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, நாட்டில் சமூக நல்லிணக்கம் ஏற்படவும், மக்களாட்சி விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என்று தான் செபிப்பதாகவும், அர்ஜென்டீனா நாட்டவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொலை முயற்சி

கிறிஸ்டினா அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சித்தவர் 35 வயது மதிக்கத்தக்க Fernando Andrés Sabag Montiel  என்பவர் எனவும், இவர் பிரேசில் நாட்டில் பிறந்து, 1993ஆம் ஆண்டில் சிறு வயதில் அர்ஜென்டீனாவிற்கு குடிபெயர்ந்தவர் எனவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2007ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை அர்ஜென்டீனா நாட்டு அரசுத்தலைவராகப் பணியாற்றிய கிறிஸ்டீனா கிர்ச்னர் அவர்கள், அதற்குமுன் நான்கு ஆண்டுகள் அந்நாட்டின் முதல் பெண்மணியாகவும் விளங்கியவர். இவர், 2019ஆம் ஆண்டில் அந்நாட்டின் துணை அரசுத்தலைவராகவும் பொறுப்பேற்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2022, 15:53