தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு பொழுதுபோக்குத் துறைகளைச் சார்ந்த கலைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு பொழுதுபோக்குத் துறைகளைச் சார்ந்த கலைஞர்களுடன்  

கலைஞர்களிடம் திருத்தந்தை: அழகை, உண்மையை பேணி வளருங்கள்

பல்வேறு நாடுகளின் கலைஞர்கள், சட்டத்துறையினர், மற்றும், தலைவர்களைக் கொண்ட உலகளாவிய அரசு-சாரா Vitae அமைப்பு, முதன் முறையாக வத்திக்கானில் உலகளாவிய கலைஞர்களைக் கொண்டு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

அழகு, மனிதருக்கு நல்லது, அது குணப்படுத்துகிறது, மற்றும் வாழ்வுப் பயணத்தில் முன்னோக்கிச் செல்ல நமக்கு உதவுகின்றது என்பதால், கலைஞர்கள், நற்செய்தியை அறிவிப்பதற்கு அழகைப் பயன்படுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு பொழுதுபோக்குத் துறைகளைச் சார்ந்த கலைஞர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 31, இப்புதன், செப்டம்பர் 01, இவ்வியாழன் ஆகிய இரு நாள்களில் வத்திக்கானின் நான்காம் பியோ மாளிகையில் உலகளாவிய Vitae அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்குகொண்டவர்களோடு கலந்துரையாடிய திருத்தந்தை,  நம்பிக்கை மற்றும், ஒன்றிப்புக் கலாச்சாரத்தைப் பேணி வளர்ப்பதற்கு, கலைகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

அழகைப் போதிப்பவர்கள்

இயேசுவின் நற்செய்தியையும், கடவுளைச் சந்திப்பதிலிருந்து துளிர்க்கும் அனுபவங்களையும் இளையோரோடு பகிர்ந்துகொள்ளவேண்டியது, இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது என்று திருத்தந்தை கூறினார்.

உண்மைக்கும், நன்மைத்தனத்திற்கும், குறிப்பாக, அழகு, மற்றும், ஆழ்ந்து தியானித்தல் ஆகியவற்றுக்கு இட்டுச்செல்கின்ற தொடர்புப் பாதைகளைத் தேர்ந்துகொள்ளுமாறு கலைஞர்களிடம் கூறியத் திருத்தந்தை, ஒரு பயணி, ஒருவித தாகத்தோடு அதனை மேற்கொள்கிறார் எனவும், ஆண்டவர் நமக்காகக் காத்திருக்கிறார் என்ற விழிப்புணர்வை இத்தகைய மனிதருக்கு கலை வழங்க முடியும் எனவும் கூறினார்.

கலையின் அறநெறிகள்

கலைகள், இதயங்களைத் தொட்டு, அதன் கதவுகளைத் திறக்கும், முன்னோக்கிச் செல்ல உதவும் என்றுரைத்த திருத்தந்தை, கலைஞர்களுக்குத் தேவையான அறநெறி சார்ந்த மனச்சான்று குறித்தும் பேசினார்.

கலை, மனிதரை மதிக்கத் தூண்டும் என்றும், அது இதயத்தில் ஒரு முள்ளை வைத்து ஆழ்ந்து சிந்திக்க நம்மை அழைத்துச்செல்லும் என்றும், இச்சிந்தனை நம் வாழ்வுப் பாதைக்கு உதவும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

பொது நலன், பன்னாட்டு அளவில் மதிக்கப்படும் விழுமியங்கள், மற்றும், சந்திப்புக் கலாச்சாரத்தைப் பேணி ஊக்கப்படுத்துவதன் வழியாக, ஒரு கலாச்சார மாற்றம் கொண்டுவருவதில் கலைஞர்களின் பங்கு என்ன என்பது குறித்து, உலகளாவிய Vitae அமைப்பு, திரைப்படம், ஊடகம், இசை, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் சிறந்த வல்லநர்களைக் கொண்டு, வத்திக்கானில் இந்த இரண்டு நாள்கள் கூட்டத்தை நடத்தியது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2022, 16:02