உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன்,  திருத்தந்தை உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன், திருத்தந்தை  

கல்வி நிறுவனங்கள் வரவேற்கும் இடங்களாக இருக்கவேண்டும்.

குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகள், அவர்களுக்கு கல்வி வாய்ப்பு, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவை கூடுதலாக இடம்பெறவேண்டும் என்ற நோக்கத்தில், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

வரவேற்கின்ற மற்றும், எல்லாரையும் ஒருங்கிணைக்கின்ற இடங்களாக, கல்வி நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்று, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோரிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, இவ்வியாழனன்று கூறியுள்ளார்.

“குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு கல்வி வாய்ப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் கல்விபெறுவதற்குரிய வாய்ப்புக்களை அதிகமாகத் தேடிவரும் இக்காலக்கட்டத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றுள்ளது மகிழ்வைத் தருகின்றது என்று கூறியுள்ளார்.

குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகள், அவர்களுக்கு கல்வி வாய்ப்பு, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவை கூடுதலாக இடம்பெறவும், அம்மக்களை வரவேற்கும், பாதுகாப்பளிக்கும் மற்றும் ஒருங்கிணைக்கின்ற இடங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் அமைக்கப்படவும் வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆய்வு, கல்வி கற்பித்தல், சமூக முன்னேற்றம் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய, மூன்று தலைப்புக்கள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கியுள்ள திருத்தந்தை, புலம்பெயர்தலுக்கு உரிமை இல்லை எனக் கூறப்படும்வேளை, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்தலுக்கு காரணங்கள் குறித்து கூடுதலாக ஆய்வுகள் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.   

உலகில் இடம்பெறும் மற்றொரு வகையான வன்முறை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைக் கறைப்படுத்தல் என்றும், இப்பூமியின் வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுதல் மற்றும், மாசுகேட்டால், அது மிகவும் சேதமடைந்துள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கு பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், இப்பூமியைப் பராமரிப்பதற்கு உலகத் தலைவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புலம்பெயர்ந்தோருக்கு நன்மைதரும் வகையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2022, 14:08