தேடுதல்

முதலாம் ஜான் பவுல், ஆன்மாவின் புன்னகையைப் பெற்றுத்தருவாராக

அருளாளர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தனது மகிமையைத் தேடவில்லை, மாறாக, மனத்தாழ்மையும் கனிவும் மிக்க மேய்ப்பராக வாழ்ந்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தனது புன்னகையால், ஆண்டவரின் நன்மைத்தனத்தை வெளிப்படுத்துவதில் வெற்றிகண்டார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக அறிவித்த திருப்பலியில் கூறினார்.

தன் கதவுகளை ஒருபோதும் அடைக்காத, இதயங்களை ஒருபோதும் கடினப்படுத்தாத, புகார்களை அல்லது, பகைமையை தன்னிலே ஒருபோதும் சேகரித்து வைக்காத, கோபத்தில் அல்லது, பொறுமையிழந்த நிலையில் வளராத, கடந்தகாலத் துன்ப நினைவுகளில் நிலைத்திருக்காத, அதேநேரம் மகிழ்வு, அமைதி மற்றும் புன்னகை முகத்தோடு இருக்கும் ஒரு திருஅவை எத்துணை அழகானது எனவும் திருத்தந்தை கூறினார்.

செப்டம்பர் 04, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தொடங்கிய இத்திருப்பலியில், பெய்துகொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் பங்குபெற்ற 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கருக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் தந்தையும், நம் சகோதரருமான அருளாளர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், ஆன்மாவின் புன்னகையை நமக்குப் பெற்றுத்தருமாறு அவரின் பரிந்துரையை இறைஞ்சுவோம் எனவும் கூறியத் திருத்தந்தை, வரையறையின்றி அன்புகூரவும், மகிழ்வான திருஅவையாக இருக்கவும் ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு இத்திருப்பலியில் பங்குகொண்ட கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் சீடர் யார்? என்பதை எடுத்துரைக்கும், பொதுக்காலம் 23ம் ஞாயிறு நற்செய்தி (லூக்.14:25-33) வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வாழ்வுமுறைக்கும், சமூகத்தின் அச்சங்களை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு வாழ்வோருக்கும் இடையேயுள்ள வேறுபாடு குறித்து எடுத்தியம்பினார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக

கடவுளின் வழிகள் வித்தியாசமானவை

இவ்வாறு வாழ்கின்றவர்கள், பிரச்சனைகளைத் தீர்க்கும் மீட்பராக உறுதியளித்து, தங்களின் சொந்த அதிகாரத்தை அதிகப்படுத்திக்கொள்பவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவரின் செயல்முறை, இத்தகையோருக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது எனவும், கடவுளின் வழிகள் வித்தியாசமானவை எனவும் கூறினார்.  

நம் ஆண்டவர், நம் தேவைகளை அல்லது, பலவீனங்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதில்லை, எளிதான வாக்குறுதிகளையும், சலுகைகளையும் வழங்குவதில்லை, மிகப்பெரிய கூட்டங்களில் அவர் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது, அவர்களின் அங்கீகாரத்தையும் தேடுவதில்லை என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான தேவை என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல், சாதாரண ஆர்வத்தோடு தம்மைப் பின்பற்றும் மக்கள் குறித்து ஆண்டவர் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறார் என்றார்.

பிரபலம் அடைவதைத் தேடுவதை விடுத்து, தம்மைப் பின்பற்றுவதன் உண்மையான காரணம், மற்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெளிந்துதேர்வு செய்யுமாறு இயேசு கேட்கிறார் என்று கூறிய திருத்தந்தை, இயேசுவைப் பின்சென்றுவந்த கூட்டத்தில் பலர், அவர் தங்களின் தலைவராக மாறுவார், மற்றும், எதிரிகளிடமிருந்து தங்களுக்கு விடுதலையளிப்பார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது என்றார்.

இத்தகைய உலகப்போக்கான சிந்தனைகளில் கவனம் செலுத்துவது இயேசுவின் பாணி அல்ல எனவும், இத்தகையோர், இயேசு மற்றும், அவரது திருஅவையின் சீடர்களாக இருக்க முடியாது எனவும் தெளிவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் சீடர்கள், அன்பு வாழ்வை மட்டுமே தெரிவுசெய்யவேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறினார். 

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு

இயேசுவைப் பின்செல்தல் என்பது, அரசவையின் அல்லது, வெற்றிப் பவனியின் ஒரு பகுதியாக மாறுவதோ அல்லது ஆயுள்காப்பீடு பெறுவதாகவோக்கூட என்ற அர்த்தமல்ல, மாறாக, இயேசுவைப்போல, தனது மற்றும், பிறரின்  சுமைகளைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்வதாகும் என்று திருத்தந்தை கூறினார்.

கணக்கின்றி அன்புகூர..

இயேசுவின் சீடராக தன்னையே அர்ப்பணித்தல் என்பது, ஒருவர் தன்னையே நோக்காமல், ஆண்டவரை நோக்கி, சிலுவையில் அறையுண்ட அவரிடமிருந்து அன்புகூரக் கற்றுக்கொள்வதாகும் என்றும், கணக்கின்றி, வரையறையன்றி வாழ்வின் இறுதிவரை அன்புகூர்வதாகும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சிலுவையில் அறையுண்ட ஆண்டவரை நோக்கும்போது, கடவுளையும், மற்றவரையும் அன்புகூர்வதில் நம் கவனம் செல்லும் என்றும், அப்போது காரியங்களை, ஏன் நம் பகைவர்களைக்கூட வித்தியாசமாகப் பார்க்க முடியும் என்றும் கூறியத் திருத்தந்தை, அன்பு தியாக வாழ்வுக்கு அழைப்புவிடுக்கிறது என்று தெரிவித்தார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக அறிவித்த திருப்பலி
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக அறிவித்த திருப்பலி

தியாக வாழ்வுக்கு அழைப்பு

அன்புகூர்தல் என்பது, தியாகம், மௌனம், புரிந்துகொள்ளாமை, தனிமை, எதிர்ப்பு, சித்ரவதை ஆகியவற்றையும் உள்ளடக்கியது எனவும், ஆண்டவருக்கும், பிறரன்புப் பணிகளுக்கும் நம்மையே அர்ப்பணிப்பதாகும் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, பொது மறைக்கல்வியுரையில் கூறியதையும் குறிப்பிட்டார்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவை முத்திசெய்ய விரும்பினால், சிலுவைக்குக் கீழே குனிய முடியாது, மாறாக, ஆண்டவரின் தலையிலுள்ள முள்முடியின் சில முள்களால் குத்தப்பட உங்களையே அனுமதிக்கவேண்டும், இறுதிவரை கூரும்அன்பு, முள்கள் நிறைந்தது, துன்பங்களிலிருந்து தப்பிஓட முடியாதது என அருளாளர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு இணக்கத்திற்கு இடம்கொடுக்காது என்பதற்கு இந்தப் புதிய அருளாளர் முன்மாதிரிகையாய் உள்ளார் எனவும், இவர், இணக்கத்திற்கு இடம்கொடாது, நற்செய்தியின் மகிழ்வை இறுதிவரை வாழ்ந்தார், இவர் தனது மகிமையைத் தேடவில்லை, மாறாக, மனத்தாழ்மையும் கனிவும் மிக்க மேய்ப்பராக வாழ்ந்தார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்ட இத்திருப்பலியை, திருத்தந்தையின் பங்கேற்போடு, புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள் நிறைவேற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2022, 13:22