நன்மை செய்வதில் எப்போதும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
நம் தினசரி வாழ்வில் நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதில் படைப்பாற்றல், நுண்மதி, மற்றும், செயல்திறனைப் பயன்படுத்துங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் ஆற்றிய மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.
இவ்வுலகின் பொருள்களை, உதவி அதிகமாகத் தேவைப்படும் மக்களுக்குப் பயன்படுத்துவதில் உடன்பிறந்த உண்ரவுடன்கூடிய அன்பு, மற்றும் தோழமையுணர்வை பெருந்தன்மையோடு வெளிப்படுத்துங்கள் என்றும், இஞ்ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் திருத்தந்தை கூறினார்.
வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர், தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படும் நிலைக்கு வந்தவுடன், அதிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் விரைவில் முன்மதியோடு செயல்பட்டது குறித்து இயேசு கூறிய உவமையை (லூக்.16:1-13) மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வுவமையை புரிந்துகொள்வது முதலில் கடினம், ஆயினும், இவ்வுவமை வழியாக இயேசு நமக்குச் சொல்லும் பாடம் குறித்து சிந்திக்கவேண்டும் என்று கூறினார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான இவ்வுவமையில் வருகின்ற வீட்டுப் பொறுப்பாளர் குறித்த தன் சிந்தனைகளை எடுத்துரைத்த திருத்தந்தை, வீட்டுப் பொறுப்பாளர் தனது நிலையை நொந்துகொள்ளாமல், அதிலிருந்து மீள்வதற்கான வழியில் முன்மதியோடு செயல்பட்டார் என்றும், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள் என இயேசு கூறியதையும் குறிப்பிட்டார்.
ஒளியின் மக்கள், துன்பங்களிலிருந்து வெளியேறும் வழிகளைத் எவ்வாறு தேர்ந்துகொள்வது என்பதை சிலநேரங்களில் அறியாதிருக்கிறார்கள், அவ்வேளையில் முன்மதி, மற்றும், படைப்பாற்றலை, நல்லவற்றிற்கும், மற்றவர்க்குப் பணிபுரியவும் பயன்படுத்தப்படலாம் திருத்தந்தை கூறினார்.
எதார்த்தத்தைத் தெளிந்துதேர்வு செய்வதற்கும், நமக்கும் மற்றவருக்கும் நல்ல தீர்வுகளைக் காண்பதற்கும், விழிப்புணர்வும், கவனமும் தேவை என்பதை இயேசு இந்நற்செய்திப் பகுதியில் நமக்கு உணர்த்துகின்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.
எல்லாருக்கும் நல்லவர்களாய்...
மனத்தாராளம், பகிர்வு, மற்றும்,நம்மிடம் இருப்பதைக் கொண்டு பிறருக்குப் பணிபுரிதல் வழியாக, உடன்பிறந்த உணர்வு உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும் என, நம் ஆண்டவர் இவ்வுவமை வழியாக மற்றுமொரு பாடத்தை நமக்களிக்கின்றார் என்றுரைத்த திருத்தந்தை, முதலில் நேர்மையற்று நடந்துகொண்ட அந்த வீட்டுப்பொறுப்பாளர், பின்னர் பகிர்தலின் வழியாக எவ்வாறு நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டார் என்றார்.
எனவே நிலைவாழ்வைச் சுதந்தரித்துக்கொள்ள இவ்வுலகின் பொருள்களைச் சேர்த்து வைக்கவேண்டிய தேவையில்லை, ஆனால், இவ்வுலகப் பொருள்களை நமக்கு மட்டுமே என்றில்லாமல், பிறருக்கும் பயன்படுத்தும் உடன்பிறந்த உணர்வின் உறவுகளால் வெளிப்படுத்தப்படும் அன்பே அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.
நேர்மறை எண்ணம்
இன்றும் ஊழல், நேர்மையற்ற நடத்தை, அநீதியான கொள்கைகள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தெரிவுகளை ஆதிக்கம்செய்யும் தன்னலம், மேலும் பல இருளான சூழல்கள் ஆகியவற்றின் கதைகளைக் கேட்கிறோம், ஆயினும், கிறிஸ்தவர்களாகிய நாம், இவற்றால் சோர்வடையக் கூடாது, அல்லது, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்று திருத்தந்தை கூறினார்.
இவ்வுலகப் பொருள்களை மட்டுமன்றி, ஆண்டவரிடமிருந்து பெற்றுள்ள கொடைகள் அனைத்தையும் நற்செய்திகூரும் முன்மதி மற்றும், செயல்திறனோடு நல்லவை செய்வதில் படைப்பாற்றலோடு இருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இந்த நம் முயற்சியில் புனித கன்னி மரியா உதவுமாறு அவரது பரிந்துரையை வேண்டுவோம் என்றுரைத்து மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்