தேடுதல்

திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் கஜகஸ்தான் திருத்தந்தையின் வருகைக்காக தயாராகும் கஜகஸ்தான்  

திருத்தந்தை: கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள்

“அமைதியின் திருப்பயணமாக”, கஜகஸ்தானுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் தயாரிப்புக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 13, இச்செவ்வாயன்று கஜகஸ்தான் நாட்டில் தான் தொடங்கவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்காக இறைவேண்டல் செய்யுமாறு, செப்டம்பர் 11, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின்னர் அனைவரையும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ 18 ஆயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றி செபித்தபின்னர், தான் தொடங்கவிருக்கும் 38வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில், செப்டம்பர் 14, வருகிற புதன், 15 வியாழன் ஆகிய இரு நாள்களில் உலகின் பெரிய மற்றும், பூர்வீக மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் பங்குபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் கலந்துகொள்ளும் மதங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும், இவ்வுலகம் ஏங்கும் அமைதிக்கான பொதுவான நம் ஆவலால் வழிநடத்தப்பட்டு, சகோதரர், சகோதரிகளாக, அத்தலைவர்களோடு உரையாடல் நடத்துவதற்கும் இத்திருத்தூதுப் பயணம் ஒரு வாய்ப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார்.      

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், கஜகஸ்தான் கிறிஸ்தவ சமுதாயங்கள் மற்றும், அந்நாட்டினர் எல்லாருக்கும் தனது அன்பான வாழ்த்தைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை இஞ்ஞாயிறன்று கூறியுள்ளார்.

அமைதியின் திருப்பயணமாக...

 “அமைதியின் திருப்பயணமாக”, கஜகஸ்தானுக்கு தான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது செபத்தால் தன்னோடு உடன்பயணிக்குமாறும் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இத்திருத்தூதுப் பயணத்தின் தயாரிப்புக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஒரு கோடியே 90 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கஜகஸ்தானில் கத்தோலிக்கர் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2022, 13:25