“திருஅவைக்குள் மேய்ப்பர்கள்” என்ற நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை
மேரி தெரேசா: வத்திக்கான்
தன் வாழ்வு தனக்குச் சொந்தமானது அல்ல, மாறாக, அவ்வாழ்வை தனக்கு அளித்த, இரக்கமுள்ள இறைத்தந்தையின் கொடை என்பதை உணர்ந்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு ஆண்டவரில் பணிபுரிவதே ஓர் ஆயரின் முதலும் முக்கியமுமான கடமையாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
திருஅவையில் சமுதாயத்தில் மற்றும், மனிதரில் மேய்ப்பர்கள் என்ற தலைப்பில், கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் எழுதியுள்ள புதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலை வாசித்தபோது, அது முழுவதும் ஆயர்கள் ஆற்றவேண்டிய பல விவகாரங்களை மையப்படுத்தியே இருப்பதை உணர முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் பக்கங்கள், வரலாற்றிற்கு மரியாதை செலுத்துவதாக மட்டுமல்லாமல், இக்காலத்தின் அறிகுறிகள் மற்றும், தேவைகளை மீண்டும் அறிந்துகொள்ள உதவுவதாக உள்ளது என்று எழுதியுள்ள திருத்தந்தை, ஓர் ஆயர், இறை இரக்கத்தை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும், அதன் வழியாக அவர், இறைவனின் விடுதலையளிக்கும், மற்றும், குணப்படுத்துகின்ற இரக்கம், ஒவ்வொரு மனிதரிலும் ஒளிர்வதற்கு உதவுபவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இறைவார்த்தையை அறிவித்து, அதற்கு திருஅவை, மற்றும், தனிப்பட்ட வாழ்வில் செயலுருவம் அளிக்கவேண்டியது ஓர் ஆயரின் கடமை என்றும், நற்செய்தியை இவ்வாறு வாழ்வதால், அது இறைவனின் பேருண்மையை ஆழமாக உணர்ந்து, வாழ்வுக்கு ஆகட்டும் என்று சொல்வதில் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
ஆயர், தன் ஆடுகளின் மத்தியில் வாழவேண்டும், அவற்றின் மணத்தை அறிந்திருக்கவேண்டும், மற்றும், மனிதரைப் பிடிக்கும் மீனவர்களாக இருக்கவேண்டும் எனவும், அந்நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார், ஜெனோவாவின் முன்னாள் பேராயர் கர்தினால் பஞ்ஞாஸ்கோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்