ஆன்மதேடலுக்கான பாதையைக் காட்டும் கனவுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசு தன் கனவுகளை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை அறிந்து, நற்செய்தியின் வழியாக நம்மை அடையாளம் கண்டு கொண்டு, ஆன்ம தேடலுக்கான பாதையைக் காட்டும் கனவுகளை அடையவேண்டும் என்று TRAPPIST துறவறத்தாரின் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்
செப்டம்பர் 16 இவ்வெள்ளியன்று சிஸ்டெர்சியன் துறவுக் குழுமத்தைச் சார்ந்த TRAPPIST துறவறத்தாரின் பொதுப்பேரவை உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை, ஒற்றுமையின் கனவு, பங்கேற்பின் கனவு, பணியின் கனவு, மற்றும் உருவாக்கத்தின் கனவு என்பது குறித்து அவர்களுக்கு உரையாற்றினார்.
நம்முடைய கனவுகள் அழகானதாக, மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வு தருவதாக, ஆன்மதேடலுக்கான பாதையைக் காட்டுபவையாக இருக்க வேண்டும் என்றும், கடவுளின் விருப்பத்தை தனது விருப்பமாக தன்னுடைய இறை மனித இதயத்தில் பெற்று அதனை செயல்படுத்திய இயேசுவோடு இணைந்து, இறைத்திருவுளத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருத்தூதர்களை நண்பர்கள் என்றழைத்து அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமையின் கனவினை நிறைவேற்றியவர் இயேசு, பாதம் கழுவி பணிவிடை புரியவே வந்தேன் என்று மாதிரி காட்டி அவருடன் மீட்புத் திட்டத்தில் பங்கேற்க செய்து பங்கேற்கும் கனவினை நிறைவு செய்தவர் இயேசு, தந்தையிடமிருந்து கற்ற அனைத்தையும் அவர்களுக்கு பொறுமையுடன் கற்பித்து பணிபுரிய அனுப்பி வைத்து, பணியின் கனவை பறைசாற்றியவர் இயேசு, உண்மையின் தூய ஆவியானவர் உங்களை உண்மையின் வழியில் நடத்துவார் என்று அவர்களை திடப்படுத்தி தூய ஆவியினால் உருவாக்கம் பெற வழிவகுத்தவர் இயேசு என்று திருவிவிலிய மேற்கோள்களுடன் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடவுள் முன்னிலையில் திறந்த மனம் உடையவர்களாய் ஒவ்வொரு நாளும் அவரை புதிதாகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து, சோர்வு ஏமாற்றம் அடையாது, தூய ஆவியின் ஆற்றலால் எல்லாவற்றையும் செய்யும் திறன் பெற்று வாழ, அதற்கு அன்னை மரியாள் துணைபுரிய அருள்வேண்டி, அவர்களை வாழ்த்தி தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்